சென்னையில் மழை நீர் தேக்கமில்லாமல் தடுக்க நிரந்தர தீர்வுக்கு ரூ 1000 கோடியில் புதிய திட்டம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, ஜன- 7
சென்னை மற்றும் புறநகர்களில் மழைநீர் தேங்காமல் நிரந்தர தீர்வு காணும் திட்டத்திற்காக ரூ 1000 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்
தமிழக சட்டபேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்
சமீபத்தில் பெய்த மழையின்போது நான் வெளியூர் பயணத்தில் இருந்தேன். சென்னை திரும்பியவுடன், நேரடியாக விமான நிலையத்திலிருந்து அந்த நள்ளிரவிலேயே மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குக் களமிறங்கி, நடவடிக்கை எடுத்தேன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்னையில் மழை கொட்டி, குடிநீர் தரக்கூடிய ஏரிகள் எல்லாமே நிரம்பி வழிந்து, முறைப்படுத்தப்பட்ட தண்ணீர் வெளியேற்றத்தின்மூலம் மக்களுக்கு ஏற்படவிருந்த பாதிப்பைத் தவிர்த்தோம்; உடைமைகள் பாதுகாக்கப்பட்டன; உயிர்கள் காப்பாற்றப்பட்டன என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
தேசிய பேரிடர் நிவாரண நிதிக்காக இந்த அரசு காத்திருக்கவில்லை. மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 801 கோடி ரூபாய் அதற்கென ஒதுக்கி பணிகளை முடுக்கி விட்டோம்; நிவாரண உதவிகளை வழங்கினோம். இதற்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழு அமைத்து ஆலோசனைகளை அவர்களிடத்திலிருந்து பெற்றோம்; தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்கிறோம். அந்த ஆலோசனைகளின் அடிப்படையில்தான் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் செயல்படுத்திட, நகராட்சி நிர்வாகத் துறை, நீர்வளத் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை போன்ற பல துறைகள் இணைந்து அந்தத் திட்டங்களைச் செயலாற்ற வேண்டியிருக்கிறது. இந்தப் பணிகளுக்காக முதற்கட்டமாக 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் உடனடியாக இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்படும். இயற்கைப் பேரிடர்களிலிருந்து மக்களைக் காப்பதில் இந்த அரசு உறுதியோடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, அடுத்த பருவமழை வருகிறபோது, சென்ற மழையின் துயரங்கள் மக்களுக்கு துளியும் இருக்கக் கூடாது என்பதை மனதில் வைத்து இந்த அரசு தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது,