பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் பொதுமக்களுடன் இணைந்து சென்னையில் கேட்டு ரசித்தார்.
மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் வருங்காலங்களில் நடைபெறாமல் இருக்கவும், அதனை முழுமையாக தடுப்பதற்கான நடவடிக்கைகளும் கூட்டுக்குழு மூலமாக எடுக்கப்படும் என மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் கூறியுள்ளார்.
பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் பொதுமக்களுடன் இணைந்து சென்னையில் கேட்டு ரசித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மனதின் குரல் நிகழ்ச்சிய மூலம் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமையில் நாட்டு மக்களிடையே பிரதமர் உரையாற்றி வருகிறார். இன்றைய மனதின் குரல் நிகழ்ச்சியில் பல்வேறு சிறப்புகளை எடுத்துக் கூறியிருக்கிறார். வரும் புத்தாண்டிலே அனைவரும் ஒரு சபதத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். தேசத்தின் வளர்ச்சிக்காகவும் சமுதாயத்தின் வளர்ச்சிக்காகவும் எவ்வாறு நம்மை கட்டமைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் அதற்காக நம்மை எவ்வாறு தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் தெரிவித்துள்ளார்.
கேப்டன் வருணசிங் கின் வீரம், தீரம் குறித்தும் அவர் தம் ஆசிரியருக்கு எழுதிய கடிதம் குறித்தும் எடுத்துக்கூறி தேர்வுக்கு மாணவர்கள் எவ்வாறு தயாராக வேண்டும் என்பதையும் அடுத்தமுறை கூறவிருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார். நாம் மிகப்பெரும் தடுப்பூசி இயக்கத்தை செயல்படுத்தி வருகிறோம். யாரும் செய்யாத சாதனையை நம் நாடு செய்துள்ளது, பாரதப் பிரதமர் செய்துள்ளார். 140 கோடிக்கு மேல் தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளோம். மலைப்பகுதி, பனிப்பிரதேசமான காஷ்மீர் போன்ற அனைத்து இடங்களுக்கும் சென்று தடுப்பூசி செலுத்தியுள்ளோம்.
இளைஞர்கள் தங்களை தலை சிறந்தவர்களாக மாற்றி நாட்டையும் சமுதாயத்தையும் உயர்த்தும் வகையில் அவர்கள் சிந்திக்க வேண்டும். 2022 ஆம் ஆண்டில் இந்தியா தலைசிறந்த நாடாக மாற வேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார். நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து ஒரு மீனவர் கூட சுட்டுக் கொல்லப்படவில்லை. இலங்கை அரசாங்கம் நமது மீனவர்களை கைது செய்யும் போக்கு தொடர்ந்து நடந்து வருகிறது. சென்ற மாதம் கூட 23 பேர் கைது செய்யப்பட்டபோது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.ஜெய்ஷங்கர் தலையிட்டு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்தார். தற்போது கூட 55 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை விடுவிக்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். அவரும் அதற்கு முன்னரே மீனவர்களை விடுவிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
இது போன்ற நிகழ்வுகள் நடக்கக்கூடாது என்பதே அனைவரது எண்ணம், இது தொடர்பாக கூட்டுக்குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூடவேண்டிய இந்தக் குழு கொரோனா காரணமாக கூடவில்லை. விரைவில் இந்தக் குழு கூடி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மீனவர்கள் கைது செய்யும் நடவடிக்கைக்கு எல்லைதாண்டுதல் மட்டுமே காரணமாக இருக்காது. மீன் பிடிப்பதற்காக 20 நாட்டிக்கல் மைல் தொலைவிலுள்ள சர்வதேச எல்லையை நமது மீனவர்கள் கடப்பதாலேயே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. கூட்டுக்குழு மூலமாக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் வருங்காலங்களில் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்ட திட்டங்களின் படி மீனவர்களை விடுவித்து அவர்களை விரைவிலேயே தாயகம் திரும்ப செய்வோம். 15 – 18 குழந்தைகள், முன்களப் பணியாளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி வழங்க உத்தரவிட்டுள்ள பிரதமருக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறேன். மத்திய அரசு யாருக்கும் பாகுபாடு காட்டியதில்லை மற்ற மாநிலங்களுக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு தமிழகத்திற்கும் தேவைப்படும் அனைத்தையும் அளித்து வருகிறோம் என்று அமைச்சர் எல் முருகன் கூறினார்.