ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் மறைவு.. மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல்!
ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் மறைவு.. மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல்!
சென்னை: நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு செல்ல முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட அதிகாரிகள் கோவைக்கு வந்தனர். சூலூரிலிருந்து வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு எம்ஐ ரக விமானத்தில் அவர்கள் சென்றனர்.
வெலிங்கடன் பயிற்சி மைய ஹெலிபேடை நெருங்க 10 கி.மீ. தூரம் இருந்த நிலையில் காட்டேரி எனும் அடர்ந்த காட்டு பகுதி அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பிபின் ராவத் மறைவுக்கு தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- இந்தியாவின் முதல் முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 ராணுவ வீரர்களின் மறைவு வருத்தம் அளிக்கிறது. ஈடுசெய்ய முடியாத இந்த இழப்பிற்காக, நாட்டுடன் இணைந்து இரங்கல் தெரிவிப்பதோடு, அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிகிச்சையில் இருக்கும் குரூப் கேப்டன் வருண் சிங் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்’ என்று கூறியுளளார்.
மத்திய அமைச்சர் எல்.முருகன்:- இந்தியாவின் முதல் முப்படை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் நீலகிரி, குன்னூர் அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் நீத்தது மிகவும் மன வேதனை அளிக்கிறது. நம் தேசத்தின் நலனுக்காக வாழ்ந்த இவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.ஓம் சாந்தி!! இ.பி.எஸ்-ஓ.பி.எஸ்:- முப்படை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தது மிகுந்த வேதனையளிக்கிறது. தேசத்தின் பாதுகாப்புக்கு பாடுபட்ட அவருக்கு வீரவணக்கத்தை செலுத்துகிறோம்.
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்:- முப்படைத் தளபதி பிபின் ராவத் துரதிர்ஷ்டவசமாக ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தது மிகுந்த வேதனையளிக்கிறது. அவரின் திடீர் மரணம் இந்திய ராணுவத்துக்கும் நம் தேசத்துக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை:- தமிழகத்தில் இன்று நடந்த மிகவும் துரதிர்ஷ்டவசமான ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 ஆயுதப் படை வீரர்களின் திடீர் மரணம் ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. நமது ராணுவத்தின் தளபதியாக, முப்படை தலைமைத் தளபதியாக மிகத் திறம்பட செயலாற்றியவர். அவருடைய இந்த துயர மரணம் நம்முடைய நாட்டிற்கு பேரிழப்பு. இந்த விபத்தில் மரணமடைந்த 13 பாரதத்தாயின் தவ பிள்ளைகளுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன். காயம் அடைந்து சிகிச்சையில் இருக்கும் GC வருண் சிங் அவர்கள் குணமடைந்து வருவதற்கு ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்!
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:- இந்திய ராணுவத்தின் முப்படை தளபதி திரு. பிபின் ராவத், அவரது மனைவி திருமதி. மதுலிகா ராவத் மற்றும் 11 ராணுவ அதிகாரிகள் நீலகிரி மாவட்டம், குன்னூர் மலைப் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான செய்தி கேட்டு அளவற்ற அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.
அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன்:- நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்தில் நாட்டின் முப்படைத் தளபதி ஜெனரல். பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இந்திய இராணுவத்தில் பல்வேறு நிலைகளில் திறம்பட பொறுப்பு வகித்த ஜெனரல். பிபின் ராவத் உள்ளிட்டோரின் மறைவால் வாடும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மற்றும் இந்திய இராணுவத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா:- முப்படைகளின் தளபதி திரு.பிபின் ராவத், அவர்களின் மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த செய்தி துயரமளிக்கிறது. ராணுவ ரீதியாக மிகப்பெரிய உயரங்களை தொட காரணமாக இருந்தவரின் இழப்பு பாரத தேசத்திற்கு பேரிழப்பாகும்.