அதிமுக ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட பால் முகவர்கள் பேரிடர் காலங்களில் கூட மக்களுக்காகவே செயலாற்றுபவர்களை அங்கீகரிப்பாரா தமிழக முதல்வர்…?

Loading

அதிமுக ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட பால் முகவர்கள் பேரிடர் காலங்களில் கூட மக்களுக்காகவே செயலாற்றுபவர்களை அங்கீகரிப்பாரா தமிழக முதல்வர்…?

ரெட் அலர்ட்டா..?, கன, மிக கனமழையா..?, பெருவெள்ளமா..?, அல்லது கொரோனா போன்ற பெருந்தொற்று காலமா..? அது எதுவாகினும் பொதுமக்களுக்கு பால் தங்குதடையின்றி கிடைப்பதற்காக தங்களை வருத்திக் கொண்டும், தங்களது உடல்நிலையைக் கூட பொருட்படுத்தாமலும் கடுமையாக உழைப்பவர்கள் பால் முகவர்கள். ஆனால் தமிழகம் முழுவதும் சேவை சார்ந்த தொழிலான பால் விநியோகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்களாகிய எங்களது உழைப்பை கடந்த கால பத்தாண்டுகளில் அதிமுக அரசு முற்றிலுமாக புறக்கணித்ததோடு, துளியளவு கூட கண்டு கொள்ளவில்லை. மாண்புமிகு தமிழக முதல்வர் மரியாதைக்குரிய மு.க.ஸ்டாலின் அவர்களே மக்கள் பணியில் மனநிறைவோடு செயலாற்றி வரும் பாவப்பட்ட ஜென்மங்களான பால் முகவர்களாகிய எங்களது நியாயமான நீண்டகால கோரிக்கைகளை தமிழக முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றி தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பால் கொள்முதல் விலை கிடைக்கவில்லை அல்லது ஆவின், தனியார் பால் நிறுவனங்களில் கொள்முதல் மறுக்கப்படுகிறது என்கிற போதெல்லாம் எங்களது வாழ்வாதாரம் கேள்விக் குறியாகிறது .பால் உற்பத்தியாளர்கள் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்வதற்கு பாலினை சாலைகளில் கொட்டி போராடியதுண்டு. ஆனால் ஆண்டு முழுவதும் மக்கள் சேவையே மகேசன் சேவை என்கிற அடிப்படையில் செயலாற்றி வரும் எங்களுக்கு தெரிந்ததெல்லாம் ஆவின், தனியார் என்கிற பாகுபாடின்றி எந்த சூழ்நிலையிலும் பொதுமக்களுக்கு தங்குதடையற்ற பால் விநியோகம் செய்ய வேண்டும் என்கிற நோக்கம் மட்டுமே.

உயிர்கொல்லி நோயாக விளங்கும் கொரோனா நோய் பெருந்தொற்று காலத்தில் கூட மக்களை வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசு வலியுறுத்திய போதும், பால் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கூட பாதுகாப்பாக வீடுகளுக்குள் முடங்கிப் போயிருந்த நேரத்தில் மக்களுக்கு பால் தங்குதடையின்றி கிடைக்க வேண்டும் என்கிற ஒரே நல்லெண்ண அடிப்படையில் காவல்துறையின் அடக்குமுறை, அத்துமீறலையும் சகித்துக் கொண்டு, எங்களது குடும்பத்தினர் நலனையும் கடந்து தொடர்ந்து பால் விநியோகம் செய்து மனநிறைவடைந்தவர்கள் பால் முகவர்கள்.

கனமழையாலும், பெருந்தொற்றாலும் ஏற்படும் பேரிடர் காலங்களில் மட்டுமின்றி ஆண்டு முழுவதும் மக்கள் நிம்மதியாக உறங்கும் நேரத்தில், சாலைகளில் இருக்கும் மேடுபள்ளங்களும், தெருநாய்கள் படுத்திருப்பதும் தெரியாத கும்மிருட்டு நேரத்தில் பணி பாதுகாப்பு இல்லாத சூழலிலும் கூட கண் விழித்து செயலாற்றும் பால் முகவர்களை இதுவரை இருந்த அரசுகள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே நடத்தி வந்திருப்பதால் தங்களின் ஆட்சியலாவது பால் முகவர்களை முன்களப்பணியாளர்களாக அங்கீகரித்து, ஆவின், தனியார் என்கிற பாகுபாடின்றி அனைத்து பால் முகவர்களுக்கும் இந்த கனமழை பேரிடர் காலத்திலாவது #உதவித்தொகை வழங்கிட ஆவண செய்திட வேண்டும்.

முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு ஆட்சி பொறுப்பில் இருந்த காலகட்டத்தில் தான் தமிழகத்தில் பால்வளத்துறையும் உருவாக்கப்பட்டதோடு மட்டுமின்றி பல்வேறு துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு நலவாரியங்களும் அமைக்கப்பட்டன. அந்த பெருமைமிக்க தலைவரின் வாரிசாக அவர் வழியில் தற்போது ஆட்சிப் பொறுப்பேற்று தங்களின் தலைமையில் நடைபெறும் ஆட்சியிலேயே பால்வளத்துறைக்கு என தனி நலவாரியம் அமைத்து தந்தையின் வழியில் மகன் என்பதை நிருபித்து தமிழகம் முழுவதும் பால் விநியோகம், உற்பத்தியில் ஈடுபட்டு வரும் சுமார் 30லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டுமாய் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். என்று தெரிவித்தார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *