கீழடி அகழாய்வு பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு.
சிவகங்கை அக்டோபர் 30
தமிழக முதலமைச்சர்
மு க ஸ்டாலின் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் கீழடியில் பள்ளிச்சந்தை திடலில் 110 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தொல்லியல் மேட்டில் நடைபெற்றுவரும் அகழாய்வுப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது முதலமைச்சர்
மு க ஸ்டாலின் கீழடிக்கு நேரடியாகச் சென்று அங்கு நடைபெற்றுக்
கொண்டிருந்த அகழாய்வுப் பணிகளை பார்வையிட்டு வியக்கவைக்கும் செங்கல் கட்டுமானங்கள், கருப்பு மற்றும் சிவப்பு வண்ணம் தாங்கிய பானை ஓடுகள், அரிய கல்மணிகள், தங்க அணிகலன்கள், சிந்துவெளி நாகரிக காலத்தில் காணப்பட்ட அதே திமில் கொண்ட காளையின் எலும்புகள், விளையாட்டுப் பொருட்கள், தொழில் பகுதிகள் என செழுமைமிக்க சமூகமாக சங்ககாலத் தமிழர்கள் வாழ்ந்த வரலாற்றைக் கண்டு பெருமிதம் அடைந்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக
கீழடி நாகரிகத்தின் தொன்மையையும் பண்பாட்டினையும்
உலகிற்கு முழுமையாக
எடுத்துரைக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையின் மூலமாக அகழாய்வு பணிகள் நடைபெற்றுவரும் கீழடி அகழாய்வு தளத்திற்கு வருகைதந்து அங்கு வைக்கப்பட்டிருந்த
விளக்க் காட்சியினை பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
தற்பொழுது ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கொந்தகை, அகரம் மற்றும் மணலூர் ஆகிய இடங்களில் பிப்ரவரி மாதம் பணிகள் துவங்கப்பட்டு தற்போதுவரை நடைபெற்று வருகிறது.
அதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் நான்கு கட்டங்களாக கீழடி அகழாய்வுகள் இதுவரை வெளிக்கொணரபட்டுள்ள 11,470 தொல்பொருட்களில் முக்கியத்துவம் நிறைந்த தொல்பொருட்களை காட்சிப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள காட்சிக்கூடத்தை பார்வையிட்ட பின்னர் கீழடியில் தற்போது அமைக்கப்பட்டுள்ள எட்டு அகழாய்வுக் குழிகளை முதல்-அமைச்சர் நேரடியாக பார்வையிட்டு ஆய்வுப் பணிகள் குறித்த விவரங்களை தொல்லியல்துறை அலுவலர்களிடமும் கேட்டறிந்தார்.
மேலும் சிவகங்கை மாவட்டம் கொந்தகை கிராமத்தில் கீழடி பொருள்களைக் காட்சிப்படுத்திட பொதுப்பணித் துறையின் மூலம் ரூ 12.21 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் உலகத்தரம் வாய்ந்த புதிய அகழ்வைப்பகத்தில் கட்டுமானப் பணிகள் குறித்தும் அலுவலர்களிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார்.
இந்நிகழ்வில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன், போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்எஸ் ராஜகண்ணப்பன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதன்ரெட்டி, தொல்லியல் துறை ஆணையர் (பொ) சிவானந்தம், தொல்லியல் வல்லுநர் ராஜன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.