இஸ்லாமியர் என்பதாலேயே ஷாருக் கானின் மகன் ஆரியன் கானைக் குறிவைப்பதா? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியர் என்பதாலேயே ஷாருக் கானின் மகன் ஆரியன் கானைக் குறிவைப்பதா? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நடிகர் ஷாருக்கானின் மகனான ஆர்யன் கானை போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்த வழக்கில் அதிகார அத்துமீறலும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளும் நடந்தேறி வருவது நாடெங்கிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஒரு இஸ்லாமியர் என்பதாலேயே, அவரை குறிவைத்து அரசதிகாரம் காய்களை நகர்த்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது. ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி வரை பேரம் பேசப்பட்டது என்று வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
ஆர்யன் கானை பிணையில் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு, போதை விருந்து நடந்ததாக சொல்லப்படும் சொகுசு கப்பல் நிர்வாகத்தின் மீது எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. தவிர்க்க இயலா பல்வேறு சந்தேகங்களும், விடைதெரியா கேள்விகளும் எழும் நிலையில், ஷாருக்கானின் மகன் என்பதாலேயே, இவ்வழக்கில் ஆர்யன் கான் சிக்க வைக்கப்பட்டுள்ளார் எனும் வாதத்தில் உண்மையில்லாமல் இல்லை. பா.ஜ.க. அரசின் இக்கொடுங்கோல் செயல்பாடுகளுக்கு வன்மையான எதிர்ப்பை பதிவு செய்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.