கிரெடிட் கார்டு மோசடி; 90 ஆயிரம் பறிப்பு – 5 பேர் கைது

Loading

வங்கியில் பணியாற்றும் கஸ்டமர் கேர் பணியாளர்கள் போல் நடித்து பணம் பறித்த குற்றத்திற்காக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புது டெல்லி,

தலைநகர் டெல்லியில் வங்கியில் பணியாற்றும் கஸ்டமர் கேர் பணியாளர்கள் போல் நடித்து பணம் பறித்த குற்றத்திற்காக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியின் ஷாஹ்தாரா பகுதியில் வைத்து குற்றவாளிகள் 5 பேரை கைது செய்துள்ளது டெல்லி காவல்துறையின் சைபர் செல் பிரிவு.

பாதிக்கப்பட்டவரிடம் இருந்து 90 ஆயிரம் ரூபாய் பண மோசடி செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட நபர், தன்னுடைய தனியார் வங்கி கிரெடிட் கார்டை உபயோகிக்க முடியாததால் டுவிட்டர் பதிவின் மூலமாக அவ்வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டுள்ளார். அன்றைய தினமே டோல்-ப்ரீ எண்ணிலிருந்து அவருக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் தனியார் வங்கியின் கிரெடிட் கார்டு சேவை பிரிவிலிருந்து வாடிக்கையாளர் சேவை பணியாளர் பேசுவதாக கூறியுள்ளார்.அவர் கூறியதை உண்மை என நம்பிய பாதிக்கப்பட்ட நபர், அவர் கூறிய வழிமுறைகளை பின்பற்றியுள்ளார். அதன்பின், அவருடைய கிரெடிட் கார்டில் இருந்து 90 ஆயிரம் ரூபாய் பறிபோய் உள்ளது.

உடனே அந்த நபர் போலீசாரிடம் சென்று நடந்தவற்றை கூறி புகாரளித்துள்ளார்.இது தொடர்பான விசாரணையை மேற்கொண்ட சைபர் பிரிவு போலீசார் வங்கியில் இருந்து வழங்கப்பட்ட விவரங்கள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவங்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களை வைத்து மொத்த குற்றவாளிகளையும் கூண்டோடு பிடித்துள்ளனர்.

குற்றவாளிகள் சமூக வலைதளத்தில் பதிவான தகவல்களை திருடி, சாப்ட்வேர்களை பயன்படுத்தி போலியான செல்போன் அழைப்புகளை மேற்கொள்வார்கள். இத்தகைய போன் அழைப்புகள் நம்முடைய மொபைல் போனில் டோல்-ப்ரீ எண்ணாக தெரியும்.பாதிக்கப்பட்டோரின் கிரெடிட் கார்டு விவரங்களை சேகரித்து அதன் மூலம் ஏமாற்றி பறித்த பணத்தை ஒரு இணையதளத்தில் பதிவேற்றுவார்கள். பின்னர், அந்த தளத்தில் இருந்து பணம் அவர்களுடைய வங்கி கணக்குகளுக்கு மாறுதல் செய்யப்படும்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *