சொத்து அட்டை வழங்கும் திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் – பிரதமர் மோடி அறிவிப்பு
கிராமப்புற நிலங்களை அளந்து சொத்து அட்டை வழங்கும் திட்டம், நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி கூறினார்.
போபால்,
கிராமப்புற நிலங்களை நவீன தொழில்நுட்பத்துடன் அளவிடும் திட்டத்தை (ஸ்வமிட்வா யோஜனா) பிரதமர் மோடி கடந்த ஆண்டு ஏப்ரல் 20-ந் தேதி தொடங்கி வைத்தார்.கிராமப்புற நிலங்களை டிரோன்களை பயன்படுத்தி அளந்து, சொத்துரிமை ஆவணங்கள் இல்லாத நில உரிமையாளர்களுக்கு அதற்கான ஆவணங்களையும், சொத்து அட்டையையும் வழங்குவதுதான் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.
சோதனை அடிப்படையில், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், மராட்டியம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், அரியானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், மத்தியபிரதேச மாநிலம் ஹர்தா மாவட்டத்தில் இத்திட்டம் தொடர்பான நிகழ்ச்சி நடந்தது. அதில், காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது:-
‘ஸ்வமிட்வா’ திட்டம், கிராமப்புற பொருளாதாரத்தின் வலிமையை அதிகரித்துள்ளது. கிராமங்களின் மேம்பாட்டில் புதிய அத்தியாயத்தை எழுதி உள்ளது. சொத்து ஆவணங்கள் இல்லாததால், மூன்றாம் நபரிடம் நில உரிமையாளர்கள் கடன் வாங்கி வந்தனர். அவர்களுக்கு சொத்து ஆவணங்கள் வழங்கப்படுவதன் மூலம், அவர்கள் வங்கிகளில் கடன் பெற முடியும்.
ஸ்வமிட்வா திட்டம் அமல்படுத்தப்பட்ட மாநிலங்களில், 22 லட்சத்துக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு சொத்து அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மத்தியபிரதேசத்தில் மட்டும் 1 லட்சத்து 70 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
மேற்கண்ட மாநிலங்களில் வெற்றிகரமாக செயல்பட்டதன் அடிப்படையில், கிராமப்புறங்களின் வளர்ச்சியை உறுதிப்படுத்த நாடு முழுவதும் இத்திட்டம் அமல்படுத்தப்படும். இது, கிராம சுயராஜ்யத்துக்கு எடுத்துக்காட்டாக அமையும்.
இவ்வாறு மோடி பேசினார்.