பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிப்பதை கண்காணிக்க 200 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, முகக்கவசம்
அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும்
பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்த
ஆலோசனைக் கூட்டம் அரசு முதன்மைச் செயலாளர்/ பெருநகர சென்னை மாநகராட்சி
ஆணையாளர் திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள் மற்றும் பெருநகர சென்னை
காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் தலைமையில் இன்று
(15.09.2021) ரிப்பன் கட்டடத்தில் நடைபெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை
கடைப்பிடிப்பது மற்றும் தவறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறையுடன்
இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பொதுமக்கள் அதிகம்
கூடுமிடங்களில் முகக்கவசம் அணியாத நபர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாத வணிக
நிறுவனங்கள் மற்றும் கடைகள் ஆகியவற்றின் மீது அபராதம் விதித்தல், தொடர்ந்து
விதிமுறைகளை மீறும் நிறுவனங்களை மூடி சீல் வைத்தல் போன்ற நடவடிக்கைகளை
மேற்கொள்ள மண்டல அமலாக்கக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், விடுமுறை
நாட்களில் வணிக வளாகங்கள், மார்க்கெட் பகுதிகள் போன்ற பொதுமக்கள் அதிகம்
கூடுமிடங்களில் வருவாய் துறையின் மூலம் காவல் துறையுடன் இணைந்து சிறப்புக் குழுக்கள்
நியமிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேபோன்று, திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும் திருமண
மண்டபங்கள், ஹோட்டல்களில் நிகழ்ச்சி நடைபெறும் பொழுது மாநகராட்சி வருவாய் துறை
அலுவலர்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
திருமண மண்டபங்கள் மற்றும் ஓட்டல்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை
மாநகராட்சியின் http://covid19.chennaicorporation.gov.in/covid/marriage_hall என்ற
இணையதள இணைப்பில் பதிவேற்றம் செய்யும்படி உரிமையாளர்கள் ஏற்கனவே
அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாநகராட்சிக்கு நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களை தெரியப்படுத்த
தவறும் மண்டபங்கள் மற்றும் ஓட்டல்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்சமயம் கொரோனா நோய் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில்
பாதுகாப்பு வழிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்கும் வகையில் பொதுமக்களிடையே
விழிப்புணர்வு ஏற்படுத்தவும், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல்
போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நபர்களின் மீது நடவடிக்கை
மேற்கொள்ளவும் காவல்துறையுடன் இணைந்து மாநகராட்சியின் சார்பில் வார்டிற்கு ஒரு குழு
என 200 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் மாநகராட்சியைச் சார்ந்த 5
நபர்களும், காவல்துறையைச் சார்ந்த ஒருவரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இது தவிர்த்து, மாநகராட்சி மற்றும் காவல் துறையின் உயர் அலுவலர்கள் விடுமுறை
நாளான சனிக்கிழமைகளில் வணிக வளாகங்கள் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் திடீர் ஆய்வு
மேற்கொண்டு, பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிப்பதை கண்காணிக்க உள்ளனர்.
பெருநகர சென்னை மாநகராட்சி தலைமையிடமான ரிப்பன் கட்டடத்தில் உள்ள
ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சென்னை முழுவதும்
அமைக்கப்பட்டுள்ள 400 கண்காணிப்பு கேமராக்களின் மூலம் பொதுமக்கள் அதிகளவு
கூடியுள்ள இடங்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு அவ்விடங்களில் பாதுகாப்பு
வழிமுறைகள் பின்பற்றும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுமக்களிடையே பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதன் அவசியம் குறித்து
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சியின் களப்பணியாளர்கள் மூலமாக
பொதுமக்களுக்கு முகக்கவசங்கள் வழங்கவும், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்
பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து
விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் பெரிய அளவிலான முகக்கவச மாதிரிகள்
வைக்கப்படவும் உள்ளன. மேலும், எல்.இ.டி. திரை வாகனத்தின் மூலம் பொதுமக்கள் அதிகம்
கூடும் பகுதிகளில் கொரோனா பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படங்கள்
ஒளிபரப்பவும் நடமாடும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மைய வாகனத்தின்
மூலம் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு குறித்த தகவல்கள் ஒலிபெருக்கி மூலம்
அறிவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னைப் பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும்
செங்கல்பட்டு மாவட்டங்களைச் சார்ந்த பகுதிகளிலும் மேற்குறிப்பிட்ட கொரோனா
பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட
நிர்வாகத்திற்கு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அரசின் பாதுகாப்பு
வழிமுறைகளை தவறாமல் கடைப்பிடித்து கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தங்களைப்
பாதுகாத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 12.09.2021 அன்று தீவிர கோவிட்
தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு சுமார் 1 இலட்சத்து 91 ஆயிரம் நபர்களுக்கு
தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அவர்களின்
ஆலோசனையின்படி, இதுபோன்று தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் வாரந்தோறும்
நடத்தப்பட உள்ளன.
இக்கூட்டத்தில் கூடுதல் காவல் ஆணையாளர்கள் டாக்டர் என்.கண்ணன், இ.கா.ப.,
(தெற்கு), திரு.த.செந்தில் குமார், இ.கா.ப., (வடக்கு), துணை ஆணையாளர்கள் டாக்டர்
எஸ்.மனிஷ், இ.ஆ.ப., (சுகாதாரம்), திரு.விஷூ மஹாஜன், இ.ஆ.ப., (வருவாய் (ம) நிதி),
திருமதி டி.சினேகா, இ.ஆ.ப., (வடக்கு வட்டாரம் (பொ)), திரு.சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன்,
இ.ஆ.ப., (தெற்கு வட்டாரம்), திருமதி ஷரண்யா அரி, இ.ஆ.ப., (மத்திய வட்டாரம்), வருவாய்
கோட்டாட்சியர்கள் திருமதி கே.பரமேஸ்வரி (திருவள்ளூர்), திரு.முத்து மாதவன்
(ஸ்ரீபெரும்பத்தூர்) உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு: இணை இயக்குநர்/மக்கள் தொடர்பு அலுவலர்,
பெருநகர சென்னை மாநகராட்சி.