தொடரும் துயரம்: நீட் தோல்வி பயத்தால் காட்பாடி அருகே மாணவி தூக்கிட்டு தற்கொலை

Loading

வேலூர், செப்.15-
‘நீட்’ தேர்வு தோல்வி பயத்தால் காட்பாடி அருகே பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 12-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்தத் தேர்வினால் மாணவர்களின் எதிர்காலம் சிதைந்து போவதாக அரசியல் கட்சியினர் கருத்துத் தெரிவித்து, ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் நீட் தேர்வு பயத்தால் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் தனுஷ் (17), அரியலூர் மாவட்டத்தைச் சேர்நத மாணவி கனிமொழி (17) ஆகியோர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே நீட் தேர்வு எழுதிய 17 வயதுள்ள மாணவி ஒருவர் நேற்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி திருநாவுக்கரசு. இவரது மனைவி ருக்மணி. இவர்களுக்கு 4 மகள்கள். இதில், 3 பேருக்குத் திருமணம் ஆகி அவர்களது குடும்பத்தாருடன் வசித்து வருகின்றனர். 4-வது மகள் சௌந்தர்யா (17). வேலூர் தோட்டப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்புப் படித்தார்.
இதைத் தொடர்ந்து, மருத்துவப் படிப்பில் சேர செளந்தர்யா நீட் தேர்வுக்குத் தயாரானார். கடந்த 12-ம் தேதி காட்பாடியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட நீட் தேர்வு மையத்தில் கலந்துகொண்டு தேர்வு எழுதினார். தேர்வு முடிந்து வீட்டுக்குத் திரும்பிய செளந்தர்யா, தன் தாயார் ருக்மணியிடம் வேதியியல், இயற்பியல் பாடங்களில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததாகவும், அதனால் நீட் தேர்வைத் தான் சரியாக எழுதவில்லை என்றும் தேர்ச்சி முடிவு எப்படி இருக்குமோ? எனவும் கவலையுடன் தெரிவித்து அழுதார்.
மாணவிக்கு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆறுதல் கூறி, தேர்வு முடிவு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை எனக்கூறி அவரைத் தேற்றினர். இருந்தாலும் மாணவி செளந்தர்யா கடந்த 2 நாட்களாக மன அழுத்தத்துடன் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. 2 நாட்களாகச் சரிவரச் சாப்பிடவில்லை என்பதால் பெற்றோர் அவரை சமாதானம் செய்தனர்.
இந்நிலையில், திருநாவுக்கரசு தன் மனைவி ருக்மணியுடன் நேற்று காலை வெளியே சென்றார். செளந்தர்யா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். வெளியே சென்ற திருநாவுக்கரசு 2 மணி நேரம் கழித்து வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் அறையில் செளந்தர்யா சேலையில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
மகளின் உடலைப் பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். உடனே, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதுகுறித்துத் தகவல் அறிந்ததும், காட்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் பழனி, வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் மற்றும் காவல்துறையினர் அங்கு வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பே தேர்வு பயத்தால் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இதைத் தடுக்க நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளின் பயத்தைப் போக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் அவர்களுக்குத் தேவையான ஆலோசனையை விரைந்து கொடுக்க வேண்டும். அதே நேரத்தில், பெற்றோர் கவனமுடன் மாணவர்களைக் கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *