புதுவையில் விநாயகர் சிலைகள் வைக்க தடையில்லை கவர்னர் தமிழிசை
புதுச்சேரி,
சதுர்த்தி கொண்டாட்டத்தின்போது புதுவையில் விநாயகர் சிலைகள் வைக்க தடையில்லை என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
புதுவை கவர்னர் மாளிகையில் கொரோனா வாராந்திர சீராய்வு கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்ததும் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தடுப்பூசி
புதுவையில் 48 மணிநேரம் கொரோனா தடுப்பூசி முகாம் தொடர்ந்து நடந்து வருகிறது. தடுப்பூசி போடுபவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. தற்போது பள்ளி, கல்லூரிகளை திறந்துள்ளோம்.
18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களிடம் தடுப்பூசி போடுவதில் தயக்கம் இல்லை. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் தடுப்பூசி போட தயங்குகின்றனர். இதுவரை 62 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளோம். 75 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட்டுவிட்டால் கூடுதல் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
தமிழகத்தை சேர்ந்தவர்கள்
புதுவையில் கோவில்கள் திறக்கப்பட்டு மக்கள் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். விழாக்காலம், பண்டிகை காலங்களிலும் கோவில்களை திறந்து வைத்துள்ளோம். இருந்தபோதிலும் அவற்றால் பெரிய அளவில் தொற்று பரவல் ஏற்படவில்லை.
புதுவையில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்து இருப்பதுபோல் தோன்றுகிறது. இதுதொடர்பாக ஆய்வு செய்து பார்த்தோம். அப்போது ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டவர்களில் 40 சதவீதம் பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அதேபோல் புதுவை அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் 30 சதவீதம் பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
விநாயகர் சிலைகள்
திருவிழாக்களை மக்கள் எச்சரிக்கையுடன் சமூக இடைவெளியை பின்பற்றி கொண்டாட வேண்டும். கட்டுப்பாடுகளை நாம் கடைப்பிடித்தால் எதற்காகவும் பயப்பட தேவையில்லை.
தெலுங்கானா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது சிலைகள் வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வருகிற 10-ந்தேதி நடக்கும் விழாவில் நானும் கலந்துகொள்கிறேன்.
அதேபோல் புதுவையிலும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட தடையில்லை. மக்கள் விழிப்புடன் நடக்கும்போது ஏன் தடை விதிக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.