திமுகவினர் மண் அள்ளுவதை தடுத்தவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு

Loading

பழனி அருகே குளத்தில் திமுகவினர் மண் அள்ளுவதை தடுத்தவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிந்ததை கண்டித்து செல்போன் டவர் மீது ஏறி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி.இங்குள்ள தனியார் செல்போன் டவரின் மீது ஏறி காளிபட்டியை சேர்ந்த சதாசிவம் என்பவர் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் தெரிவித்ததாவது: மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட காளிபட்டி செங்குளத்தில் மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற திமுக துணை தலைவர் மோகனபிரபு, திமுக கவுன்சிலர் பொன்னுத்தாய் மகன் வெங்கடாசலம் உள்ளிட்ட திமுகவினர் மண் அள்ளுவதாகவும்,கடந்த சனிக்கிழமை அன்று தனது மகன் கலைகௌதம் மற்றும் அவரது நண்பர்களுடன் சென்று போட்டோ எடுத்ததாகவும்,அப்போது இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அவர்களிடம் இருந்த செல்போன் களை பிடுங்கி வைத்துக் கொண்டதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் தனது மகன் கலைகௌதம், கவியரசு,மனோஜ், ஓடை ஈஸ்வரன், வனசேகர், கார்த்தி, ராஜேஷ் உள்ளிட்ட 8பேர் மீதும், சத்திரப்பட்டி போலீசார் கொலை முயற்சி மற்றும் பிசிஆர் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும்‌ தெரிவித்தார். மண் அள்ளுபவர்களை விட்டுவிட்டு, தடுத்தவர்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்ததை கண்டித்து செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த சத்திரப்பட்டி மற்றும் ஆயக்குடி போலீசார் சதாசிவத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.அப்போது பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும் தங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இதனையடுத்து பேச்சுவார்த்தையில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகவும் போலீசார் தெரிவித்ததை அடுத்து சமரசம் ஏற்பட்டு செல்போன் டவரில் இருந்து சதாசிவம்‌ கீழே இறங்கி வந்தார். இந்நிலையில்‌ இதுகுறித்து மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் வெங்கடாசலத்திடம் கேட்டபோது அவர் தெரிவித்ததாவது :- மஞ்சநாயக்கன்பட்டி மயானம் முதல் காளிபட்டி செங்குளம் வரையுள்ள விவசாய நிலங்களுக்கு செல்ல பாதை இல்லாததால் பாதை அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அரசு மற்றும் தனியார் பட்டா நிலங்களில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டு ஊராட்சி மன்றம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரின் அனுமதியோடு பாதை அமைக்கத் தேவையான கிராவல் மண்ணை காளிபட்டியில் உள்ள செங்குளத்தில் விதிகளுக்கு உட்பட்டு மண் அள்ளப்பட்டு பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சில சமூகவிரோதிகள் பணம் பறிக்கும் நோக்கத்தில் பாதை அமைக்கும் பணியை தடுத்து தகராறில் ஈடுபட்டு, லாரி மற்றும் ஜேசிபி வாகன ஓட்டுனர்களை அடித்து செல்போன்களை பிடுங்கி தகராறில் ஈடுபட்டனர்.இதுகுறித்து காவல் நிலையத்தில் விவசாயிகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் இன்று சதாசிவம் என்பவரை காவல்துறை கைது செய்யப்போவதை அறிந்து, செல்போன் டவர் மீது ஏறி சதாசிவம்‌ நாடகமாடி, காவல்துறையினரின் நடவடிக்கையை திரித்துக்கூறி வேண்டுமென்றே பிரச்சனை செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0Shares

Leave a Reply