ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம்

Loading

புதுச்சேரி
ஆசிரியர் பற்றாக்குறையை போக்கிட ஒப்பந்த அடிப்பைடயில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் பற்றாக்குறையை போக்கிட ஒப்பந்த அடிப்பைடயில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:-
ஒப்பந்த ஆசிரியர்கள்
கல்வியறிவின்மையை அறவே ஒழிக்கும் பொருட்டும் மற்றும் மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்கும் நோக்கத்திலும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்களான இலவச பாடப்புத்தகங்கள், நோட்டு, சீருடை, சிற்றுண்டி, மதிய உணவு, ஒரு ரூபாய் சலுகை கட்டணத்தில் பஸ்வசதி, கல்வி உதவித்தொகை முதலிய நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இந்த கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அனைத்து வசதிகளுடன் கூடிய மாதிரி பள்ளிகளாக 5 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்.
ஆசிரியர்களின் பற்றாக்குறையை தீர்க்கும் பொருட்டு ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்த ஆண்டில் ரூ.2 கோடியே 40 லட்சம் செலவில் 100 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் நிறுவப்பட உள்ளன. பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் தற்காப்பு பயிற்சி அளிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி ஏடு
பள்ளிகள் கொரோனா தொற்றினால் மூடப்பட்டதன் காரணமாக மாணவர்களுக்கு கற்றலில் ஏற்பட்ட இடைவெளியை சமன்செய்யும் பொருட்டு கற்பித்தல் நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபட பயிற்சி ஏடு வழங்கப்படும். நடப்பு நிதியாண்டில் பள்ளிக்கல்விக்காக ரூ.724 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பெருந்தலைவர் காமராஜர் மாணவர் கல்வி நிதி உதவி திட்டத்தின்கீழ் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி தொடர்ந்து வழங்கப்படும். இதற்காக எனது அரசு ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் 9 ஆயிரத்து 214 மாணவர்கள் பயன்பெறுவர்.
7-வது ஊதியக்குழு பரிந்துரை
ரூ.334 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் தேசிய திட்டமிடுகை மற்றும் கட்டிட கலை பள்ளி ஒன்றை புதுச்சேரி மாநிலத்தில் நிறுவுவதற்காக விரிவான திட்ட அறிக்கை இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
7-வது மத்திய ஊதியக்குழு பரிந்துரையை அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரிகளில் அமல்படுத்தவும் மற்றும் பணி உயர்வுகளுக்காகவும் ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு விழிப்புணர்வை மேம்படுத்தி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பொருட்டு தொழில் நோக்குநிலை அமைப்பு ஒன்று உருவாக்கப்படும். நடப்பு நிதியாண்டில் உயர் மற்றும் தொழில்நுட்ப கல்விக்காக ரூ.296 கோடியே 62 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

0Shares

Leave a Reply