சட்டசபையில் தமிழில் உரையாற்ற இருப்பது மகிழ்ச்சி
புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் தமிழில் உரையாற்ற இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறினார்.
புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் தமிழில் உரையாற்ற இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறினார்.
கவர்னருக்கு அழைப்பு
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. கூட்டத்தில் துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். பட்ஜெட்டை முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்கிறார். ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் உரையாற்றுகிறார்.
இந்தநிலையில் கவர்னர் மாளிகைக்கு நேற்று காலை முதல்-அமைச்சர் ரங்கசாமி சென்றார். அங்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து பேசினார். அப்போது 15-வது சட்டபேரவையின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். மேலும் மாநில வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
தமிழில் உரை
புதுச்சேரியில் இதுவரை கவர்னராக இருந்தவர்கள் சட்டசபையில் ஆங்கிலத்தில் தான் உரையாற்றி வந்துள்ளனர். கவர்னர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசிப்பார்.
ஆனால் முதல் முறையாக தற்போது கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழில் உரையாற்ற உள்ளார். இதனை அவரே நேற்று தெரிவித்தார்.
இதுகுறித்து நிருபர்களிடம் கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியதாவது:-
சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை மறுநாள் (நாளை) தொடங்க உள்ளது. ஏற்கனவே நான் தமிழில் பதவியேற்றுக் கொண்டேன். தமிழில் அமைச்சர்கள் பதவியேற்பு விழாவையும் நடத்தியுள்ளேன். இது இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
தற்போது சட்டசபையில் தமிழில் உரையாற்ற உள்ளேன். இது எனக்கு ஆயிரம் மடங்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பட்ஜெட்டுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. பல நல்ல அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறும். மாநில வளர்ச்சிக்கு நான் என்றும் உறுதுணையாக இருப்பேன்.
வளர்ச்சிக்கு உறுதுணை
சமீபத்தில் பிரதமர், உள்துறை மந்திரி ஆகியோரை சந்தித்து பேசிய போது அவர்கள், தெலுங்கானா, தமிழகம், புதுவை மக்களைப்பற்றி கேட்டறிந்தனர். 3 மாநில வளர்ச்சிக்கும் மத்திய அரசு உறு துணையாக இருக்கும் என உறுதியளித்தனர். குறிப்பாக புதுச்சேரி மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இருப்பதால் நல்ல திட்டங்கள் கொண்டு வரப்படும். அதற்கு பக்கபலமாக மத்திய அரசு இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்