தஞ்சையில் இருந்து 2-வது கவர்னராக நியமிக்கப்பட்ட இல.கணேசன்
தஞ்சாவூர்,
தமிழக பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான இல.கணேசன் மணிப்பூர் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். 76 வயதான இவர் 1945-ம் ஆண்டு, பிப்ரவரி 16-ந்தேதி தஞ்சை மானோஜியப்பா தெருவில் உள்ள பட்கோசாமி வட்டாரம் பகுதியில் பிறந்தார். தெற்கு வீதியில் உள்ள வீரராகவ மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். பின்னர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நகர நில வரித் திட்ட அலுவலகத்தில் பணியாற்றினார்.
இவருக்கு 5 சகோதரர்கள், 3 சகோதரிகள் உண்டு. தனது 25-வது வயதில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்த இல. கணேசன் திருமணம் செய்து கொள்ளாமல் முழுநேரமும் மக்கள் பணியாற்றினார்.
கடந்த 1990 -ம் ஆண்டில் பா.ஜ.க.வில் இணைந்த இவர் 2005 முதல் 2008-ம் ஆண்டு வரை தேசிய செயலாளராக இருந்தார். அப்போது, கட்சி வளர்ச்சிக்காக கர்நாடகம், கேரளம், அந்தமான் நிகோபர் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு பணிகளை ஆற்றினார். இதையடுத்து, 2008-2011-ம் ஆண்டுகளில் மாநிலத்தலைவராகவும் பொறுப்பு வகித்தார். இதையடுத்து, மாநிலங்களவை உறுப்பினராகப் பொறுப்பு வகித்த இவர் தற்போது பா.ஜ.க. தேசியப் பொதுக் குழு உறுப்பினராக உள்ளார்.
மகாகவி பாரதி மீது பற்று கொண்ட இவர் பல்வேறு இலக்கியச் சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். தற்போது, மணிப்பூர் கவர்னராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதன் முன்பு தஞ்சை நாணயக்கார செட்டித்தெருவைச் சேர்ந்த வி.சண்முகநாதன் மேகாலயா கவர்னராக 2015-ம் ஆண்டில் நியமிக்கப்பட்டு, 1½ ஆண்டுகள் பணியில் இருந்தார். இவரைத் தொடர்ந்து தஞ்சையில் இருந்து 2-வது கவர்னராக இல.கணேசன் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.