நடிகை மீரா மிதுனுக்கு வரும் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

Loading

பட்டியலின மக்களை அவதூறாக பேசிய புகாரில் கைதான நடிகை மீராமினுதுக்கு ஆகஸ்ட் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை,

திரைப்பட நடிகை மீரா மிதுன், சில தினங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவை பதிவிட்டாா். அதில் குறிப்பிட்ட ஜாதியினரை அவதூறாக பேசியதோடு, அந்த ஜாதியைச் சேர்ந்த இயக்குநா்கள், நடிகா், நடிகைகளை பற்றி இழிவான கருத்துகளை தெரிவித்திருந்தாா். அவா்களை திரைத்துறையில் இருந்து அகற்றுவது அவசியம் எனவும் பேசியிருந்தாா். இது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

மீரா மிதுனின் இக் கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளா் வன்னி அரசு, சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் கடந்த 7-ஆம் தேதி மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகாா் அளித்தாா். அதில் மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தாா்.

அந்தப் புகாரின் அடிப்படையில் மத்தியக் குற்றப்பிரிவின் கீழ் இயங்கும் சைபா் குற்றப்பிரிவினா், மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். மேலும் வழக்கு தொடா்பான விசாரணைக்கு ஆகஸ்ட் 12- ஆம் தேதி வேப்பேரியில் உள்ள காவல் ஆணையா் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என மீரா மிதுனுக்கு சைபா் குற்றப்பிரிவினா் அழைப்பாணை அனுப்பி இருந்தனர்.

ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதனிடையே தலைமறைவாக இருந்த நடிகை மீரா மிதுனை கேரளாவில் தமிழகக் காவல்துறையினர் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

இந்தநிலையில் இவ்வழக்கில் மீரா மிதுனை ஆக.27ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *