ஊராட்சி மன்ற அலுவலகத்தில் முதல்வர் படத்தை வைக்க அனுமதி மறுப்பு.
பாலக்கோடு.ஜூலை. 20-
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றியத்திற்குட்பட்ட மாதேஅள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழக முதல்வர் மற்றும் முன்னாள் முதல்வர் படங்களை வைக்க பாமகவை சேர்ந்த ஊராட்சி தலைவர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு.
தருமபுரி மாவட்டம். பென்னாகரம் ஒன்றியத்திற்குட்பட்ட மாதேஅள்ளி ஊராட்சியில் மொத்தம் 6 வார்டு உள்ளது. அதில் திமுக உறுப்பினர்கள் 2 பேரும்,பாமக 3 பேரும்,அதிமுக ஒருவர் உள்ளனர். இதில் பாமக,அதிமுக கூட்டணி பெரும்பான்மையில் உள்ளது. இந்த ஊராட்சியில்,ஊராட்சி மன்ற தலைவராக பாமகவை சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் உள்ளார். இவர் காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணி செய்து ஓய்வுபெற்று உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மை பெற்று தமிழக முதல்வராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் முதல்வர் ஸ்டாலின் படம் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பென்னாகரம் ஒன்றியத்திற்குட்பட்ட மாதேஅள்ளி ஊராட்சியில் திமுகவை சேர்ந்த உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தமிழக முதல்வர் மற்றும் முன்னாள் முதல்வர் ஆகியோரின் படங்களை வைக்க வந்த போது பாமகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமி அவர்களை தடுத்து நிறுத்தி படங்களை வைக்ககூடாது என வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றியது. பின்னர் தலைவரின் எதிர்ப்பை மீறி திமுகவினர் தமிழக முதல்வர் மற்றும் முன்னாள் முதல்வர் ஆகியோர் படங்களை வைத்தனர். இதனை அறிந்த செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க சென்ற போது அவர்களை உள்ளே விடாமல் ஊராட்சி மன்ற தலைவர் தடுத்து நிறுத்தினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் சிவக்குமார் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பிரபு மாரி சின்னசாமி முன்னாள் வார்டு ஊராட்சி இயக்குனர் சரவணன் முன்னாள் பொருளாளர் பெருமாள் பச்சையப்பன் சுப்பிரமணி பரமசிவம் துரைராஜ் செல்வம் சங்கர் மேலும் கழக உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.