சிவசங்கர் பாபா பள்ளியின் 5 ஆசிரியைகள் வீட்டை பூட்டி விட்டு தப்பி ஓட்டம்

Loading

கேளம்பாக்கம் பள்ளி மாணவிகள் மீதான பாலியல் வழக்கு
சிவசங்கர் பாபா பள்ளியின் 5 ஆசிரியைகள் வீட்டை பூட்டி விட்டு தப்பி ஓட்டம்

சென்னை, ஜூலை 18-
கேளம்பாக்கம் பள்ளி மாணவிகள் மீதான பாலியல் வழக்கில் சிவசங்கர் பாபா, கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அந்த வழக்கு சம்பந்தமாக 5 ஆசிரியைகளுக்கு சம்மன் வழங்க சிபிசிஐடி போலீசார் நேரில் சென்றபோது, யாரும் இல்லை. வீடுகளை பூட்டி விட்டு மாயமானது தெரிந்தது. இதையடுத்து அவர்களது வீட்டின் கதவில் சம்மனை போலீசார் ஒட்டிவிட்டு சென்றனர்.
சென்னை அருகே கேளம்பாக்கத்தில் உள்ள சுசில்ஹரி பள்ளி தாளாளர் சிவசங்கர் பாபா, மாணவிகளுக்கு பாலியல் கொடுத்ததாக முன்னாள் மாணவ, மாணவியரின் வாட்சப் குரூப்பில் பகிரப்பட்டது. இதையடுத்து நெட்டிசன்கள் பலரும் யூடியூப் தளத்தில் சாமியார் சிவசங்கர் பாபாவை வறுத்தெடுத்தனர். மாணவிகள் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து, சிவசங்கர் பாபாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அவருக்கு ஜாமீன் கோரி செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை நீதிபதி தமிழரசி விசாரித்தார். அப்போது சிவசங்கர் பாபா தரப்பில் ஆஜரான வக்கீல், வயது மூப்பு காரணமாகவும், 2 முறை இதய அறுவை சிகிச்சை செய்துள்ளதாலும், அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும்’ என்றார். இதற்கு அரசு தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்றார். இதையடுத்து விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார். இந்நிலையில் மீண்டும் கடந்த 13ம் தேதி நீதிபதி முன்பு சிவசங்கர் பாபாவை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, வரும் 27ம் தேதி வரை காவலை நீடித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறையில் சிவசங்கர் பாபாவை அடைத்தனர். இந்நிலையில் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட 5 ஆசிரியைகளிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்தனர். அதன்படி ஆசிரமத்தை ஒட்டியுள்ள பழனி கார்டன் குடியிருப்பில் வசித்து வரும் 5 ஆசிரியைகள், சிபிசிஐடி போலீஸ் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பினர்.
ஆனால், 5 பேரும் ஆஜராகவில்லை. இதையடுத்து வரும் 19ம் தேதி சிபிசிஐடி போலீசார் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளிப்பதற்கான சம்மனை நேரில் வழங்க நேற்று காலை சிபிசிஐடி போலீசார் சென்றனர். ஆனால் 5 பேரின் வீட்டு கதவுகளும் பூட்டியிருந்தது. யாரும் இல்லை. 5 பேரும் மாயமாகி விட்டனர். உடனே பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களிடம் போலீசார் விசாரித்தபோது, ‘தங்களுக்கு எதுவும் தெரியாது’ என்று தெரிவித்தனர்.
இதையடுத்து 5 ஆசிரியைகளின் வீட்டு கதவுகளில் சம்மன் நோட்டீசை போலீசார் ஒட்டி விட்டு சென்றனர். போலீசாரின் கைது விவகாரத்துக்கு பயந்து 5 ஆசிரியைகளும் வீடுகளை பூட்டி விட்டு தலைமறைவாகி இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *