சபரிமலை கோவில்: இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி

Loading

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஜூலை 17,
திருவனந்தபுரம்,

கொரோனா ஊரடங்கு காரணமாக சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. ஆனால் மாத பூஜைகள் பக்தர்கள் இன்றி மிக எளிமையாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கேரள அரசு ஊரடங்கில் தளர்வு அறிவித்ததை தொடர்ந்து வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு பக்தர்கள் கோவில்களில் வழிபாடு நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது.
இன்று (சனிக்கிழமை) முதல் 21-ந் தேதி வரை 5 நாட்கள், அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜையை தொடர்ந்து மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு தீபாராதனை, அபிஷேகம் நடைபெறும். இரவு 9 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

கொரோனா கட்டுப்பாடு தளர்வு காரணமாக இன்று முதல் தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான ஆன்லைன் சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். இந்த சான்றிதழ்கள் இல்லாத பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *