தமிழகத்துக்கு 1 கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும்: பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை, ஜூலை 16-
தமிழகத்துக்கு ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காணொலிக் காட்சி மூலமாக தமிழகம், கேரளா, கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா, ஆந்திரா மாநில முதல்வர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக காணொலி காட்சி வாயிலாக கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
“கொரோனா பெருந்தொற்றைச் சமாளிக்கும் கடினமான பணியை, புதிதாகப் பொறுப்பேற்ற ஓர் அரசு எதிர்கொள்ள வேண்டிய நிலை இருந்த ஒரே பெரிய மாநிலம் தமிழகம்தான். எனது அரசு இச்சவாலை எதிர்கொண்டு, உயிரிழப்புகளைக் குறைத்து, நோய்த்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.
தமிழகத்துக்கான ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கியமைக்காக இந்திய அரசுக்கு முதற்கண் எனது நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். பிரதமரின் நேரடித் தலையீட்டைக் கோரும் சில முக்கியமான விவகாரங்களை கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
தடுப்பூசிகள் வீணடிக்கப்படுவதை, தமிழக அரசு 6 விழுக்காட்டில் இருந்து முழுமையாக தவிர்த்துள்ளதுடன், தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வையும் பெரிய அளவில் வெற்றிகரமாக ஏற்படுத்தியுள்ளது. இதனால், தற்போது தமிழகத்தில் தடுப்பூசிக்கான தேவை மிகவும் அதிகரித்துள்ளது. எனினும், பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், எங்கள் மாநிலத்துக்கான ஒதுக்கீடு மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க, சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி தடுப்பூசிகளை வழங்கக் கோரியிருக்கிறேன். இந்த முக்கியமான பிரச்சனையில், நான் உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன். இரண்டு கோடி குடும்பங்களுக்கு, இரு தவணைகளில் 4 ஆயிரம் ரூபாயை கொரோனா நிவாரணத் தொகையாகக் கொடுத்துள்ளோம். மேலும், 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் இந்தக் குடும்பங்களுக்கு வழங்கியுள்ளோம். மத்திய அரசு முன்னுரிமை அட்டைதாரர்களுக்கு வழங்கும் கூடுதல் அரிசியை அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் தமிழக அரசு விரிவுபடுத்தி யுள்ளது. இதைப்போன்று, தகுதியுடைய அனைத்து அட்டைதாரர்களுக்கும் இத்திட்டத்தை மத்திய அரசு விரிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அடுத்ததாக, தற்போது நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு, கொரோனா தொடர்பான அனைத்துப் பொருட்களுக்கும் சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அதனைக் கனிவுடன் பரிசீலிக்கவும். மூன்றாம் அலை வரும் எனக் கூறப்படுகிற நிலையில், அதனைச் சமாளிப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அதனை எதிர்கொள்வதற்கு ஏதுவாக, மாநிலங்களுக்கு மேலும் பல உதவிகளை மத்திய அரசு வழங்கிட வேண்டும்.
பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் தற்போதைய சூழலில், நீட் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை நடத்துவது தொற்றுப்பரவலுக்கு வழி வகுத்துவிடலாம். எனவே, பிரதமர் இம்முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இப்பெருந்தொற்றைக் கையாள்வதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும் என உறுதியளிக்கிறேன். இதில் இருந்து மீள, உங்களோடும் அனைத்து மாநிலங்களோடும் நாங்கள் துணை நிற்போம்”.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.