மேகதாது அணை விவகாரம்: டெல்லி புறப்பட்டது அனைத்துக்கட்சி குழு: நாளை ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சருடன் சந்திப்பு
சென்னைm ptuw 15-
கர்நாடகா அரசு, மேகதாதுவில் புதிய அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்த அனைத்துக்கட்சி குழு இன்று டெல்லி புறப்பட்டது. நாளை ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சருடன் சந்தித்து பேசுகின்றனர். கர்நாடக அரசு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் மேகதாதுவில் புதிய அணையை கட்ட திட்டமிட்டு அதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ள நிலையில், காவிரி நதிநீரில் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும், தமிழக விவசாயிகளின் நலனை பேணிக்காக்கவும், தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுகுறித்து முடிவெடுக்க, தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் கடந்த 12ம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ, பாமக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மமக, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, புரட்சி பாரதம் ஆகிய 13 கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இறுதியில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரியின் கீழ்ப்படுகை மாநிலங்களின், முன் அனுமதியை பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமான பணியையும் மேற்கொள்ளக் கூடாது. இத்திட்டத்தினால் தமிழ்நாடு விவசாயிகளுக்கு தேவையான நீர் கிடைப்பது பாதிப்படையும். உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரான இத்தகைய முயற்சி, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மாட்சிமைக்கு விடப்படும் சவாலாகும். எனவே, கர்நாடக அரசின் இத்திட்டத்திற்கு, இதில் தொடர்புடைய ஒன்றிய அரசின் அமைச்சகங்கள் எவ்விதமான அனுமதிகளையும் வழங்க கூடாது என ஒன்றிய அரசை கேட்டுக்கொள்வது.மேகதாது அணை அமைப்பதற்கான முயற்சிகளை தடுப்பதில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மாநிலத்தில் உள்ள அனைத்துக்கட்சிகளும் தங்களுடைய முழு ஆதரவையும், முழு ஒத்துழைப்பையும் வழங்கும். தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில், இக்கூட்டத்தின் தீர்மானங்களை ஒன்றிய அரசிடம் அனைத்துக் கட்சியினரும் நேரில் சென்று முதற்கட்டமாக வழங்குவது.
அதன்பிறகு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கு உள்ளிட்ட சட்டபூர்வ நடவடிக்கைகள் மற்றும் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் அடங்கிய குழுவினர் இன்று மாலை 5 மணி மற்றும் 5.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்ட விமானங்கள் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கின்றனர். முன்னதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று காலை 10.50 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். இந்த குழுவினர், நாளை காலை ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து, அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை வழங்கி மேகதாதுவில் அணை கட்ட கர்நடாக அரசு அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்த உள்ளனர். ஒன்றிய அரசு எடுக்கும் நடவடிக்கைகளை பொறுத்து, அடுத்தக்கட்டமாக உச்ச நீதிமன்றத்தை நாட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.