நீட் தேர்வு விவகாரம்: முதல்வரிடம் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை தாக்கல்
சென்னை, ஜூலை 14-
தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு ஆய்வு நடத்தி, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று அறிக்கை தாக்கல் செய்தது.
மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு முறையானது சமுதாயத்தின் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்குக் கடந்த சில ஆண்டுகளாக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்தும், அவ்வாறு பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால், அவற்றைச் சரிசெய்யும் வகையில், இம்முறைக்கு மாற்றாக அனைவரும் பயன்பெறத்தக்க வகையிலான மாணவர் சேர்க்கை முறைகளை வகுத்துள்ளது.
அவற்றை நடைமுறைப்ப டுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும், அவற்றிற்கான சட்ட வழிமுறைகள் பற்றியும் முழுமையாக ஆராய்ந்து, அரசுக்குப் பரிந்துரைகளை அளித்திட ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன் தலைமையில், கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு ஒன்றைக் கடந்த மாதம் 10-ம் தேதி அரசு அறிவித்தது.
இந்த அறிவிப்பின்படி, ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன் தலைமையில், 8 உறுப்பினர்கள் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. இந்தக் குழு உரிய புள்ளிவிவரங்களை ஆய்வு செய்து, தமிழ்நாட்டிலுள்ள பின்தங்கிய மாணவர்களின் நலனைப் பாதுகாத்திடத் தேவையான பரிந்துரைகளை ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு அளிக்கும். இந்தப் பரிந்துரைகளை ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ளும் என அரசு அரசாணை வெளியிட்டது.
குழுவில் 1. ஏ.கே.ராஜன் (நீதிபதி ஓய்வு) தலைவர், 2. ஜி.ஆர்.ரவீந்திரநாத், உறுப்பினர், 3. ஜவஹர் நேசன், உறுப்பினர், 4. அரசு முதன்மைச் செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை உறுப்பினர், 5. அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறை உறுப்பினர், 6. அரசு செயலாளர், சட்டத்துறை உறுப்பினர், 7. அரசு முதன்மைச் செயலாளர் / சிறப்புப் பணி அலுவலர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை உறுப்பினர், 8. இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்ககம், உறுப்பினர், 9. கூடுதல் இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்ககம் / செயலர், தேர்வுக் குழு உறுப்பினர்-செயலர் / ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இருந்தனர்.
இந்தக் குழுவில் பொதுமக்கள், கல்வியாளர்கள், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் என யார் வேண்டுமானாலும் நீட் தேர்வின் தாக்கம் சாதகம், பாதகம் குறித்துச் சொல்லலாம், மெயில் அனுப்பலாம் என்று தலைவர் ராஜன் அறிவித்தார்.
இதையடுத்து இக்குழுவில் 86,000க்கும் மேற்பட்ட கருத்துகள், பொதுமக்கள், ஆசிரியர், மாணவர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலதரப்பட்டோரால் தெரிவிக்கப்பட்டன. இதனிடையே இந்தக் குழுவை எதிர்த்து பாஜகவைச் சேர்ந்த கரு.நாகராஜன் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
இக்குழு அமைக்கப்பட்ட தில் எவ்வித விதிமீறலும் இல்லை. ஒரு அரசு தனது மக்களிடம் கருத்து கேட்பதைத் தவறு என்று மனுதாரர் எப்படி ஆட்சேபிக்க முடியும் எனக் கேட்ட உயர் நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு பல முறை கூடி ஆய்வு செய்து தனது அறிக்கையை இறுதிப்படுத்தி 34 நாட்களுக்குப் பின் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையைச் சமர்ப்பித்தது. மொத்தம் 165 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் வந்த கருத்துகள், அதன் தன்மை, பாதிப்புகள், கிராமப்புற, நகர்ப்புற மாணவர்களுக்கான பாதிப்புகள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாதிப்புகள், பயிற்சி மையத்தில் பயிற்சி பெறுவோரே நீட் தேர்வில் வெல்லும் நிலை, பெற்றோர், ஆசிரியர், மாணவர் தரப்பில் உள்ள பிரச்சினைகள், ஆதரவு கருத்துகள் உள்ளிட்ட பல அம்சங்களை ஆலோசித்து அதன் சாராம்சங்கள் மற்றும் அரசுக்கு கமிட்டியின் பரிந்துரை எனப் பல அம்சங்களுடன் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் அறிக்கை அடிப்படையில் அரசு உயர் அலுவலர்கள், பள்ளிக் கல்வி, உயர் கல்வி அமைச்சர்கள் துறைசார் செயலர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்திய பின்னர் உரிய முடிவெடுப்பார் எனத் தெரிகிறது