அரசு தோட்டக்கலை பண்ணையை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பார்வையிட்டு மரக்கன்றுகளை நட்டார்
திருவள்ளூர் ஜூலை 12 : திருவள்ளுர் மாவட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றியம், ஈக்காடு கண்டிகை ஊராட்சியில், தோட்டக்கலைத்துறையின் 8.93 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அரசு தோட்டக்கலை பண்ணையை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பார்வையிட்டு, மரக்கன்றுகளை நட்டு வைத்து, விவசாயிகளுக்கு மிளகாய், கத்திரி விதைக் கன்றுகளை வழங்கினார். அப்பொழுது மாவட்ட ஆட்சியர் கூறியதாவது :
திருவள்ளுர் மாவட்டத்தில் முதன் முறையாக அரசு தோட்டக்கலைப் பண்ணை ஈக்காடு கண்டிகை கிராமத்தில் 8.93 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. தரமான செடிகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் விநியோகம் செய்வதற்கதாக இப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. 12.10.2020 அன்று துவங்கப்பட்ட இப்பண்ணையை சுற்றிலும் முள்வேலி அமைக்கப்பட்டு உள்ளது.
மின்சாரத்திற்காக சூரிய ஒளித் தகுடு அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. தரமான செடிகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் விநியோகம் செய்வதற்காக இப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. குழித்தட்டு நாற்றுகள் உற்பத்தி செய்வதற்காக 1000 சதுர மீட்டர் நிழல் வலைக்குடில் அமைக்கப்பட்டுள்ளது. 1,41,841 லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட தரை நிலை நீர்த் தேக்கத் தொட்டி நீர்பாசனத்திற்காக அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு ஆழ்த்துளைக்கிணறு நீர்பாசனத்திற்காக அமைக்கப்பட்டுள்ளது.மழை காலத்தில் வரும் தண்ணீரை சேமிக்க பண்ணைக் குட்டை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பண்ணையில் தினக்கூலி அடிப்படையில் பணி செய்யும் மகளிர் மற்றும் ஆண் கூலியாட்களுக்காக பணியாளர் கூடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் தோட்டக்கலை பண்ணை இல்லாத சூழ்நிலையில் இப்பண்ணை அமைக்கப்பட்டு, தோட்டக்கலைத்துறை வாயிலாக இந்த ஆண்டு 88 இலட்சம் விதை கன்றுகள் தயார் செய்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் நேரடியாகவோ அல்லது தோட்டக்கலைத்துறை அலுவலர்களையோ அணுகி, விதைகளை பெற்றுச் செல்லலாம், இங்கு மிளகாய், கத்திரி, அலங்கார செடிகளின் விதைகள் தயாரித்து வழங்கப்படவுள்ளது. 2 ஹெக்டேர் நிலம் உள்ள விவசாயிகளுக்கு, 40,000-ம் விதைகள் வரை இலவசமாக வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறினார்.
இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ச.வித்யா, வேளாண்மை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் எபிநேசர்,தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஜெபகுமாரி, தோட்டக்கலைத் துறை அலுவலர் திவ்யா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.