முன்னோடிகளை சந்தித்து அனுபவங்களை கேட்டறிந்து கொள்ள வேண்டும் – புதிய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை
புதுடெல்லி,
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை நேற்று முன்தினம் மாற்றம் செய்யப்பட்டது. இதில் பல புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. புதிய மந்திரிசபையில் இடம்பெற்று உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார். அப்போது அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:-
இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமீபத்திய மாதங்களை ஒப்பிடுகையில் தற்போது குறைந்திருக்கிறது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவும் விரும்பலாம். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக நீங்கவில்லை என்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும். பல நாடுகளில் தொற்று அதிகரித்து வருகிறது. அத்துடன் வைரஸ் தொடர்ந்து உருமாறியும் வருகிறது.
எனவே கொரோனா தொற்று தொடர்பாக கவனக்குறைவோ, மனநிறைவோ வேண்டாம். கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம், நிலையான தடுப்பூசி மற்றும் உயர் பரிசோதனையுடன் முழு வீரியத்துடன் நடந்து வருகிறது.
நமது நோக்கம் பயத்தைத் தூண்டுவதாக இருக்கக்கூடாது. ஆனால் சாத்தியமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுக்குமாறு மக்களைக் கேட்டுக்கொள்வதன் மூலம், இந்த தொற்றுநோயைத் தாண்டி அடுத்த கட்டத்துக்கு நாடு செல்ல முடியும்.
மந்திரிகள் அனைவரும் சரியான நேரத்தில் அலுவலகத்தை அடைந்து, உங்களின் ஆற்றல் முழுவதையும் பணிகளில் செலுத்துவதுடன், மிகவும் பின்தங்கிய மக்களுக்கு உதவுவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும் மோசமான செயல்களில் மந்திரிகள் ஈடுபடக்கூடாது. தேவையற்ற கருத்துகளை வெளியிடுவதையும் மந்திரிகள் தவிர்க்க வேண்டும். புதிய மந்திரிகள் உங்கள் துறைகளில் முன்னோடிகளை சந்தித்து, அவர்களது அனுபவங்களை கேட்டறிந்து கொள்ளலாம்.இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.