மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் -மு.க.ஸ்டாலின் அழைப்பு
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை :
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பாக, சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
தமிழக முதல்- அமைச்சர் பிரதமரை நேரில் சந்தித்து மேகதாது அணை பிரச்சினை குறித்து தமிழ்நாட்டின் நிலைபாட்டை விளக்கி, நமது மாநில விவசாயிகளின் நலன் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அண்மையில் ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சரை சந்தித்து, இந்தப் பிரச்சினையில் ஒன்றிய அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
மேகதாது அணை அமைக்க தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது எனக் கோரி கர்நாடக முதலமைச்சர் தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதியபோது, இந்த அணை கட்டுவதால், தமிழ்நாடு விவசாயிகளின் நலன் பாதிக்கப்படும் என்றும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பிற்கு இது எதிராக அமையும் என்றும் திட்டவட்டமாக விளக்கி, இந்த அணை அமைந்திட தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என உறுதிபடத் தெரிவித்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கர்நாடக முதலமைச்சருக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்கள்.
இந்த சூழ்நிலையில், விவசாயிகளின் நலனைக் காப்பதில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பினரின் ஒருமித்த எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில், மேகதாது அணை பிரச்சினை குறித்து கலந்தாலோசிக்க, தமிழகத்திலுள்ள அனைத்து சட்டமன்றக் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையில், வருகிற 12-7-2021 (திங்கட்கிழமை) அன்று காலை 10-30 மணியளவில், தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சட்டமன்றக் கட்சிகளுக்கும் முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.