மணவாளநகரில் வேலைவாய்ப்பு முகாம் : திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி பா.ம.க கவுன்சிலர் தினேஷ்குமார் கலெக்டரிடம் மனு :
திருவள்ளூர் ஜூலை 07 : திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் வேலைவாய்ப்பு முகாம் நடத்த கோரி மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் பாட்டாளி மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலாளரும் மாவட்ட ஊராட்சி கவுன்சிலருமான தினேஷ்குமார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியுள்ளதாவது :
திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரக்கணக்கான தகுதியுள்ள படித்த இளைஞர்கள் உள்ளனர். இப்பகுதிகளில் பி.சி.ஏ,கேட்டர்பில்லர்,பி.சி.பி போன்ற பன்னாட்டு தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு சிறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
தற்சமயம் இந்த தொழிற்சாலைகளில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆட்களை பணியமர்த்தி வருகின்றனர். ஆனால் சுற்று வட்டார பகுதியில் இருக்கும் பல முதல் பட்டதாரி மற்றும் இதர பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை.
எனவே மாவட்ட ஆட்சியர் மணவாளநகர் பகுதியை சுற்றி இயங்கி வரும் பல பன்னாட்டு தொழிற்சாலைகள்,திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் பக்கத்து மாவட்டங்களில் இயங்கி வரும் பல்வேறு தொழிற்சாலைகளை அழைத்து தமிழக அரசின் மூலம் மணவாளநகரில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி மணவாளநகர் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தகுதியுள்ள பல முதல் பட்டதாரி மற்றும் இதர பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தருமாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீது உடனடியாக தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உறுதியளித்தார்.