மூத்த பத்திரிகையாளர் வி.அன்பழகன் மீது அதிமுக ஆட்சி காலத்தில் போட்ட அனைத்து வழக்குகளும் ரத்து…
![]()
சென்னை
கடந்த அஇஅதிமுக ஆட்சியில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் S.P. வேலுமணி முறைகேட்டிலும் ஊழலிலும் ஈடுபட்டார் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வாங்கிய தகவலகளின் அடிப்படையில் மூத்த பத்திரிக்கையாளரும் , மக்கள் செய்தி மையம் இணைய தள இதழின் ஆசிரியருமான வி.அன்பழகன் செய்தி வெளியிட்டார் .
மேற்படி செய்தியின் தொடர்ச்சியாக தன்னைப் பற்றி அன்பழகன் மூலம் எந்த செய்தியும் வெளிவரக் கூடாது என்று வேலுமணி கடந்த 20.04.2017 அன்று தனது வழக்கறிஞர் S. துரைசாமி மூலம் வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பினார் . 24.04.2017 அன்று வேலுமணியின் சகோதரர் அன்பரசன் தன்னைப் பற்றியும் , தன் சகோதரர் வேலுமணி பற்றியும் செய்தி வெளியிட கூடாது என்று நிரந்தர உறுத்துக்கட்டளை கோரியும் , 5 கோடி நஷ்ட ஈடு கேட்டும் C.S.No.378 / 2017 என்ற வழக்கினை தாக்கல் செய்தார் . இதற்கிடையே அன்பழகன் 27.04.2017 அன்று ஆலந்துறை போலீஸாரால் கைது செய்யப்பட்டார் .
இதன் தொடர்ச்சியாக ஆவடி காவல் நிலையத்தில் 6 வழக்குகள் , தாம்பரம் காவல் நிலையத்தில் 5 வழக்குகள் , கோவை உக்கடம் மற்றும் குரோம்பேட்டை காவல் நிலையங்களில் தலா 2 வழக்குகளும் , திருவேற்காடு , மதுரவாயல் , துடியலூர் , குனியமுத்தூர் , கோவை சாய்பாபா காலனி , கோவை புதூர் , பெரியமேடு , R.S. புரம் ஆகிய காவல் நிலையங்களிலும் தலா ஒரு வழக்கு என்று மொத்தம் 23 வழக்குகள் தொடர்ச்சியாக 10 நிமிடத்திற்கு ஒரு வழக்கு என்ற வகையில் இரண்டு நாட்களில் தாக்கல் செய்யப்பட்டது . மேற்கண்ட வழக்குகள் யாவும் . பத்திரிக்கையாளர் அன்பழகன் அவர்கள் பணம் கேட்டதாகவும் , பணம் கொடுக்கவில்லை என்றால் அவர்களை பற்றி தவறான செய்திகள் எழுதப் போவதாக மிரட்டியதாகவும் , உள்ளாட்சி துறையில் பதவியில் இருக்கும் பலவேறு அதிகாரிகள் மூலம் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டது . கடந்த 18.05.2017 அன்று அன்பழகன் அவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் . மேற்படி வழக்கு ( குண்டர் தடுப்பு சட்டம் ) 17.08.2017 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது . வேலுமணியின் சகோதரர் அன்பரசன் 5 கோடி கேட்டு தொடர்ந்த வழக்கிற்கும் சிறையில் இருந்தே பதில் மனு தாக்கல் செய்தார் அன்பழகன்
இது மட்டுமல்லாமல் பொறியியல் கல்லூரி மாணவரான அன்பழகனின் மகன் தமிழ்ச் சிற்பி மீதும் இது போன்ற ஒரு வழக்கு ( Crime No. 30/2020 ) குரோம்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு கடந்த 09.09.2020 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது . தொடர்சியான மன உளைச்சலால் தனது தாயாரையும் இழந்தார் . அன்பழகன் தன் மீது போடப்பட்ட 23 வழக்குகளை ரத்து செய்ய வழக்கு போட்டார் .
மேற்கண்ட 23 வழக்குகளையும் விசாரிப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவினை பலவேறு தேதிகளில் பிறப்பித்தது . மேற்படி வழக்குகள் மாண்புமிகு நீதிபதி M. தண்டபாணி அவர்கள் முன்பு இறுதி விசாரணைக்கு எடுக்கப்பட்டது .
இவ்வழக்குகளில் மனுதாரர் அன்பழகன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் E. ஓம்பிரகாஷ் மற்றும் வழக்கறிஞர் S. குமார தேவன் ஆகியோர் ஆஜராகினர் . அரசு தரப்பில் வழக்கறிஞர் கோபி ஆஜரானார் . சில எதிர்மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் V. இளங்கோவன் ( முன்னாள் அமைச்சர் S.P. வேலுமணி வழக்கறிஞர் ) ஆஜரானார் . கடந்த 27.06.2021 அன்று தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது . இன்று மேற்கண்ட வழக்குகளின் தீர்ப்பு வெளியிடப்பட்டு அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்பட்டது . இதன் மூலம் முன்னாள் அமைச்சர் S.P. வேலுமணி தனது துறையில் செய்த முறைகேடுகள் வெளியே தெரியாமல் இருக்க பத்திரிக்கையாளர்கள் மீது பொய் வழக்கு போட்டது அம்பலமாகியுள்ளது . – மக்கள் செய்தி மைய நிருபர்கள் குழு தெரிவித்துள்ளது.
