இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதிபதி ரவி விஜயகுமார் மலிமத் நியமனம்
சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் மிக மூத்த நீதிபதியான திரு ரவி விஜயகுமார் மலிமத், 2021 ஜூலை 1 முதல் அந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்ற நியமித்து இந்திய குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
இமாச்சலப் பிரதேச தலைமை நீதிபதி திரு லிங்கப்பா நாராயண சுவாமி ஓய்வு பெற்றதை அடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான அறிவிப்பை மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் நீதித்துறை இன்று வெளியிட்டுள்ளது.
கடந்த 1987-ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்துகொண்ட நீதிபதி ரவி விஜயகுமார் மலிமத், பி.காம்., எல்எல்.பி., கர்நாடகா, சென்னை உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றத்தின் சிவில், குற்றம், அரசியலமைப்பு, தொழிலாளர், நிறுவனங்கள் சேவை வழக்குகளில் சுமார் 20 ஆண்டுகள் பணியாற்றினார். பெங்களூருவில் உள்ள பெங்களூரு பல்கலைக்கழகம் மற்றும் ஷிமோகாவின் குவெம்பு பல்கலைக்கழகத்திலும் அவர் பணியாற்றியுள்ளார். கடந்த 2008-ஆம் ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும், 2010-ஆம் ஆண்டு நிரந்தர நீதிபதியாகவும் அவர் நியமிக்கப்பட்டார். கடந்த 2019-ஆம் ஆண்டு இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்திற்கு அவர் மாற்றம் செய்யப்பட்டார்.