புதுவையில் அமைச்சர்கள் பதவியேற்பு- ஆளுநர் தமிழிசை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

Loading

புதுச்சேரியில் அமைச்சர்கள் பதவியேற்பு விழா, கவர்னர் மாளிகையில் இன்று எளிமையாக நடைபெற்றது.

புதுச்சேரி:

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. கடந்த மாதம் 7-ந்தேதி என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொள்வது தொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. ஆகிய கட்சிகளிடையே ஒரு மாதத்துக்கும் மேலாக இழுபறி நீடித்து வந்த நிலையில், கடந்த 23-ந் தேதி இறுதி செய்யப்பட்டது. புதிய அமைச்சர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனிடம் முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

இந்த பட்டியலில் என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, பா.ஜனதாவின் நமச்சிவாயம், சாய். சரவண குமார் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்று இருந்தன. இந்த அமைச்சர்கள் பட்டியலுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தார்.

இதையடுத்து புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா, கவர்னர் மாளிகையில் இன்று எளிமையாக நடைபெற்றது. புதிய அமைச்சர்கள் நியமனத்துக்கான மத்திய அரசின் உத்தரவை தலைமை செயலாளர் அஸ்வனி குமார் வாசித்தார்.

அதைத்தொடர்ந்து, முதல்வர் ரங்கசாமி முன்னிலையில், நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, சாய்.சரவணன் குமார் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.


புதிய அமைச்சர்களுக்கு கவர்னர் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். புதுவையில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் ஒருவர் அமைச்சராக பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *