சிறுமிக்கு துப்பாக்கி முனையில் பாலியல் தொல்லை: சப்-இன்ஸ்பெக்டர் கைது
செங்குன்றம்:
மாதவரம் துணை ஆணையர் அலுவலக உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சதீஷ்குமார். 37 வயதான இவர் 2011-ம் ஆண்டு நேரடி சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்துள்ளார்.
தேர்தல் நேரத்தில் காசிமேடு போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்ட சதீஷ்குமார் பின்பு மாதவரம் துணை ஆணையர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இவர் இதற்கு முன்பு மாதவரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 38 வயது பெண்ணுடன் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமாருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு 15 வயதில் மகள் ஒருவர் உள்ளார். சிறுமியான அவருக்கு சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
கணவருக்கு தெரியாமல் தாயுடன் சப்-இன்ஸ்பெக்டருக்கு இருக்கும் தொடர்பை அந்த சிறுமி முதலில் தட்டி கேட்டுள்ளார். பின்னர் இதுபற்றி தனது தந்தையிடம் சொல்லப்போவதாகவும் கூறியுள்ளார்.
அப்போது தாய் இனி அதுபோன்று சொன்னால் உன்னையும் அப்பாவையும் வீட்டை விட்டு வெளியில் அனுப்பி விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்.
இதனால் பயந்துபோன சிறுமி தாயுடனேயே வசித்து வந்தார். அப்போதுதான் சப்-இன்ஸ்பெக்டரின் பார்வை சிறுமி மீது பாய்ந்துள்ளது.
சப்-இன்ஸ்பெக்டரின் பாலியல் தொல்லைக்கு சிறுமி இணங்காமல் இருந்துள்ளார். அதனால் துப்பாக்கி முனையில் சிறுமியை மிரட்டி அவர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்று சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.
இது தொடர்பான தகவல் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் பரவ தொடங்கியது.
இந்த சம்பவம் பற்றி மாதவரம் துணை கமிஷனரான சுந்தரவதனத்துக்கும் தெரிய வந்தது. அவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து புழல் அனைத்து மகளிர் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதிரடியாக அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறுமியின் தாயுடன் ஏற்பட்ட தொடர்புக்கு பிறகே சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் சிறுமியிடமும் அத்துமீறி உள்ளார். இதனால் பாதிக்கப்படுவது தனது மகள் என்பதையும் மறந்து அந்த தாய் கல்நெஞ்சோடு இருந்துள்ளார்.
சப்-இன்ஸ்பெக்டரின் பாலியல் அத்துமீறலுக்கு அவரும் உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தாயும் கைது செய்யப்பட்டார்.
சிறுமியின் பெரியம்மாவுடனும் (தாயின் சகோதரி) சப்-இன்ஸ்பெக்டருக்கு தொடர்பு இருந்து வந்துள்ளது. இருவரும் சேர்ந்தே பலமுறை சிறுமியை சப்-இன்ஸ்பெக்டருடன் ஒன்றாக இருக்க அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து பெரியம்மா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரும் கைதானார்.
இந்த வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர், சிறுமியின் தாய், பெரியம்மா ஆகியோர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
போலீசார் விசாரணை
சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமாரின் நடவடிக்கைகள் பற்றி முழு அளவில் விசாரணை நடத்த உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதன்படி போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் பணியில் சேர்ந்த நாளில் இருந்து அவர் எங்கெல்லாம் பணியாற்றி உள்ளார். அவர் நடவடிக்கை எப்படி என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மணலி இன்ஸ்பெக்டர் புகழேந்தி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் மாதவரம் சப்-இன்ஸ்பெக்டரும் போக்சோ சட்டத்தில் கைதாகி இருப்பது காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பணியை மறந்து இதுபோன்று சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.