யோகா- அனைத்து காலத்திலும் ஆரோக்கியத்துக்கான பாதுகாப்பு கவசம் திரு.கிரண் ரிஜிஜூ,
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு, ஆயுஷ்
(தனிப்பொறுப்பு) மற்றும் சிறுபான்மையினர் நலன் இணையமைச்சர்
சர்வதேச யோகா தினம் 2021-ஐ முன்னிட்டு மனதைக் கவரும்
வகையிலும், அரிதாகவும் தணியாத உற்சாகம் உருவெடுத்து
வருகிறது. தொற்று காரணமாக, உலகம் முழுவதும் இரண்டாவது
ஆண்டாக, திறந்த வெளி நடவடிக்கைகள் அல்லது மக்கள்
கூட்டமாக திரளுவது இல்லாமல் நடப்பதால், இது அரிதானதாகும்.
இருப்பினும், மக்கள் தங்கள் இல்லங்களிலேயே அதிக அளவில்
யோகா பயிற்சிகளை மேற்கொள்கின்றனர்.
2014-ம் ஆண்டு யோகாவை பின்பற்றுமாறு உலக
சமுதாயத்தினருக்கு பிரதமர் விடுத்த அழைப்பு மிகவும்
துணிச்சலானது என்பதுடன் தொலைநோக்கு கொண்டதுமாகும்.
‘’யோகா பழமையான இந்திய பாரம்பரியத்தின் மதிப்பிமிகு கொடை’’,
என்று 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி ஐ.நா பொதுச் சபையில்
அவர் பிரகடனம் செய்தார். ‘’அது உள்ளத்தையும், உடலையும்
மட்டுமல்லாமல் சிந்தனை மற்றும் செயல், கட்டுப்பாடு மற்றும்
நிறைவேற்றம் ஆகியவற்றை ஒரு நிலைப்படுத்துகிறது.
மனிதனுக்கும், இயற்கைக்கும் இடையே நல்லிணக்கத்தை
ஏற்படுத்துவதுடன், ஆரோக்கியத்துக்கும், உடல்நலனுக்கும்
முழுமையான அணுகுமுறையை வழங்குகிறது. யோகா வெறும்
உடற்பயிற்சி அல்ல, நமக்குள் இருக்கும் ஒருமைத் தன்மை, உலகம்,
இயற்கை ஆகியவற்றைக் கண்டறிவது’’ என அவர் தெரிவித்தார்.
சர்வதேச யோகா தினத்தை கடைப்பிடிக்க உலக சமுதாயம் பாடுபட
வேண்டும் என்று அவர் மேலும் வலியுறுத்தினார். அவரது
அழைப்பை ஏற்று, 2014 டிசம்பர் 11-ம் தேதி, ஐக்கிய நாடுகள்
பொதுச்சபை, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச
யோகா தினமாக கொண்டாடப்படும் என அறிவித்தது. இதனைத்
தொடர்ந்து உலகம் முழுவதும் யோகா தினம் பல்வேறு யோகா
பயிற்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் வாயிலாக கொண்டாடப்படுகிறது.
கடந்த ஆறு ஆண்டுகளாக, யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டு
வருவதைத் தொடர்ந்து, அது உலகம் முழுவதும் முக்கிமான
ஆரோக்கிய இயக்கமாக மாறியுள்ளது. இந்தியாவில் யோகா பயிற்சி
கடைப்பிடிக்கப்பட்டு வருவதையடுத்து, பொது சுகாதாரம்
குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்துள்ளது.
சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதில்
இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது. யோகாவுக்கென
உருவாக்கப்பட்ட ஆயுஷ் அமைச்சகம், வெளிநாடுகளில் இயங்கும்
இந்திய இயக்கங்கள் யோகா தொடர்பான பயிற்சி முகாம்கள்
மற்றும் இதர நிகழ்ச்சிகளுக்கு உலகம் முழுவதும் ஏற்பாடு செய்து
வ,ருகின்றன. ஆயுஷ் அமைச்சகம், இணக்கமான சூழலில்
யோகாவைக் கடைப்பிடிக்க, 2015-ல் தனி வழிகாட்டு
விதிமுறைகளை வகுத்தது. நிபுணர்களின் வழிகாட்டுதலின்
அடிப்படையில், யோகா பயிற்சிகள் 45 நிமிடம்
மேற்கொள்ளப்படுவதை இந்த வழிகாட்டு நெறிமுறை
கொண்டுள்ளது. பாரம்பரிய யோகா பயிற்சியுடன், அறிவியல்
பூர்வமான பயிற்சிகளையும் இது உள்ளடக்கியதாகும். இந்த
வழிகாட்டு நெறிமுறைகள் ஆறு ஆண்டுகளில் பரவலாக ஏற்றுக்
கொள்ளப்பட்ட தினசரி பயிற்சி முறையாக மாறியுள்ளது.
சர்வதேச யோகா தினக் கொண்டாட்டத்துக்கு மக்களிடம் உருவான
பெரும் உற்சாகத்தின் அடிப்படையில், யோகா துறையை மேம்படுத்த
ஆயுஷ் அமைச்சகம் பல சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
யோகா மேம்பாடு மற்றும் இயற்கை வைத்தியத்துக்கான தேசிய
வாரியம் என்னும் தேசிய அளவிலான ஆலோசனை அமைப்பை
அது உருவாக்கியுள்ளது அடிப்படை முன்முயற்சியாகும். யோகாவை
மேம்படுத்துவதற்கான கொள்கை அளவிலான ஆலோசனையை அது
வழங்கி வருகிறது. தரமான யோகா பயிற்சிக்கான திறன் மேம்பாட்டு
நடவடிக்கை, எய்ம்ஸ் போன்ற மதிப்புமிகு நிறுவனங்களின்
ஒத்துழைப்புடன் யோகா அடிப்படையிலான ஆராய்ச்சிகளை
நடத்துவது ஆகியவை அமைச்சகம் மேற்கொண்டுள்ள மற்ற
நடவடிக்கைகளாகும். 1.25 லட்சம் சுகாதார மற்றும் நலவாழ்வு
மையங்களில் யோகா கற்பித்தல் மற்றும் சிகிச்சைகள்
மேற்கொள்ளப்படுகின்றன.
யோகாசனத்துக்கு விளையாட்டுப்போட்டி என்ற அங்கீகாரத்தை
ஆயுஷ் அமைச்சகம் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு
அமைச்சகம் இணைந்து வழங்கியுள்ளது. யோகாசனம் யோகாவின்
இயற்பியல் பரிமாணம் ஆகும். அதன் அடிப்படை வலிமையால்,
உலக அளவில் போட்டியாக மாறும் ஆற்றலைப் பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய
உத்திகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. இதற்கான முயற்சிகளில் நமது
தடகளப் போட்டியாளர்களும், அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.
1.25 லட்சம் சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்களில்,
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், யோகாவை கொண்டு வரும்
அரசின் முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த முடிவால்,
நாடு முழுவதும் யோகாவைப் பரப்ப வழி ஏற்பட்டுள்ளது. போதிய
அளவிலான யோகா நிபுணர்கள் இந்தப் பணியில்
ஈடுபடுத்தப்படுவார்கள்.
சர்வதேச யோகா தினம் உயரிய தொலைநோக்கின் அடிப்படையில்
கொண்டாடப்படுகிறது. பெருந்தொற்று பரவலுக்கு இடையிலும், 2020-
ம் ஆண்டு 12.06 கோடி மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறு
யோகா பயிற்சி செய்துள்ளனர். இது ஆண்டு தோறும் அதிகரித்து
வருகிறது. உதாரணமாக, யோகா ஆசிரியர்களுக்கான தேவை கடந்த
ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2015-ல் சர்வதேச
யோகா தினம் அறிவிக்கப்பட்டதிலிருந்து, யோகா பயிற்சியைக்
கற்றுக்கொள்வதற்காக இந்தியா வரும் வெளிநாட்டு சுற்றுலாப்
பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாக,
சுற்றுலா அமைச்சகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
நான்கு ஆண்டுகளில், அதாவது, 2018-ம் ஆண்டில் இது 37.4%
அதிகரித்தது. இந்த துறை தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது
என்பது உண்மையே. ஆனால், 2020-க்கு முன்பிருந்த போக்கு
எதிர்கால வளர்ச்சிக்கு நிச்சயம் வழிவகுக்கும் என்பதை
உணர்த்தியது.
யோகா பயிற்சி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், எதிர்ப்பு
சக்தியையும் மேம்படுத்துவதுடன், நோயாளிகள் நோய்களில் இருந்து
விரைந்து குணமடைய வழிவகுக்கிறது. கோவிட்-19 தொற்று
காரணமாக நிலவும் தற்போதைய சூழலில், மன அழுத்தம் உள்ளிட்ட
சவால்களுக்கு யோகா பொருத்தமான தீர்வாக அமைந்துள்ளது.
அனைவருக்கும் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமாக
கருதப்படும் இந்த நிலையில், ‘’நலனுக்கான யோகா’’ என்பது 2021
சர்வதேச யோகா தினத்துக்கான உரிய இயல்பானகருப்பொருளாகும்.
யோகாவால் கிடைக்கும் ஆரோக்கிய பயன்கள் எண்ணற்ற,
பன்முகத்தன்மை கொண்டது என்பது பரவலாக
ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. யோகா சிறந்த ஆரோக்கியம் என்னும்
வெகுமதியை வழங்குகிறது. இந்த யோகா தினம், அதனை நமது
வாழ்வின் பிரிக்கமுடியாத அம்சமாக மாற்றும் தொடக்கப் புள்ளியாக
இருக்க வேண்டும். நமது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இதனை
பின்பற்ற நாம் முயற்சி மேற்கொண்டு, செலவில்லாத இந்த சுகாதார
உறுதி நடவடிக்கையின் பலனைப் பெறுவோம்.