திருவள்ளூரில் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் மூலம் கொரோனா தடுப்பூசியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரச்சார வாகனம்
திருவள்ளூர் ஜூன் 20 : திருவள்ளூரில் செயல்பட்டு வரும் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம், சில்ரன் பிலீவ் நிறுவனத்தின் உதவியுடன் பூண்டி ஒன்றியத்தில் கல்வியை மையமாக கொண்ட குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.
அதன்படி பூண்டி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் சுகாதாரத்துறையுடன் இணைந்து தடுப்பூசி முகாம்களுக்கும் ஒத்துழைப்பு அளித்து வருகிறது. பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்கு துணையாக இருப்பதோடு, தேவையான விழிப்புணர்வையும் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் சமுதாய தன்னார்வலர்கள் மூலம் அளித்து வருகின்றனர். கிராமப்புறங்களில் குறிப்பாக மிகவும் பின் தங்கிய மக்கள் பகுதிகளில் கைப்பிரதிகள், துண்டு பிரசுரங்கள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக பொதுமக்கள் மத்தியில் கொரோனா குறித்தும், கோவிட் தடுப்பபூசியின் அவசியம் குறித்தும் ஒரு வார கால விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை திருவள்ளூரில் துவங்கி உள்ளது. இந்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை திருவள்ளூர் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர்(பொறுப்பு) அசோகன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் பூண்டி அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் வினோத் தடுப்பூசியின் அவசியம் குறித்து பேசினார்.
இந்த பிரச்சார வாகனம் பூண்டி ஒன்றியத்திலுள்ள 72 கிராமங்களுக்கும், அருகாமையில் உள்ள திருவள்ளூர் ஊத்துக்கோட்டை போன்ற நகரங்களிலும் சென்று விழிப்புணர்வு செய்தியை ஒலிபரப்பு செய்யப்படுகிறது.
இதே போன்று சாலைகளில் செல்லும் போதும் காவல்துறை அலுவலர்கள் இந்த பிரச்சார வாகனத்தின் ஒலிபெருக்கி மூலம் கொரோனா வைரஸ் பரவும் விதம், முககவசம் அணிவதன் அவசியம், அடிக்கடி சானிடைசர், சோப்பை பயன்படுத்தி கைகழுவும் அவசியம், சமூக இடைவெளியின் அவசியம், கொரோனா நோய் தொற்றின் அறிகுறிகள், நோய் தொற்றிலிருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகள், ‘தடுப்பூசி மட்டுமே நோயின் தீவிரத்தை குறைத்து உயிரிழப்பை தடுக்கும், உயிரை காப்பாற்றும் போன்ற விழிப்புணர்வு தகவல்களும் ஒலிபெருக்கி மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.