AGAMT நூலகங்களில் ஆளுங்கட்சித் தொடர்புடைய பத்திரிகைகள் வாங்க அழுத்தம் ஏன்? — தன்னாட்சி கண்டன அறிக்கை

Loading

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகங்களில் ஆளுங்கட்சித் தொடர்புடைய பத்திரிகைகள் வாங்க அழுத்தம் ஏன்?
தன்னாட்சி கண்டன அறிக்கை

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் கூட, போதிய நிதியின்றி தமிழ்நாட்டிலுள்ள ஊராட்சிகள் திணறுகின்றன. எனவேதான், ஊராட்சிகளுக்கு விடுவிக்கப்படாமல் உள்ள, ஒன்றிய மற்றும் மாநில நிதிக்குழு நிதிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, 02.06.2021 அன்று, அரசுக்கு சமூக இயக்கங்களின் சார்பாகக் கோரிக்கை வைத்திருந்தோம்.
இந்தச் சூழலில், தற்போது சிவகங்கை மற்றும் சேலம் மாவட்ட ஊராட்சிகளிலுள்ள அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட (AGAMT) நூலகங்களில் முறையே, முரசொலி மற்றும் தினகரன் நாளிதழ்கள் வாங்க மாவட்ட அதிகாரிகள் மூலம் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மற்றும் சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் உதவி இயக்குநர்கள், கடந்த 03.06.2021 அன்று, மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளனர். AGAMT நூலகங்களில் மூன்று நாளேடுகளை வாங்க வேண்டும் என்றும் அதிலொன்று குறிப்பிட்ட நாளேடாக இருக்க வேண்டுமெனவும் அந்தக் கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தைப் பொருத்த வரை முரசொலி நாளிதழும், சேலம் மாவட்டத்தில் தினகரன் நாளிதழும் அவசியம் வாங்க வேண்டுமெனவும், அவற்றிற்கான ஓராண்டு சந்தா முறையே ரூ. 1800 மற்றும் ரூ.2228 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தொகை, ஊராட்சிகளுக்கான பொது நிதியிலிருந்து (முதல் வங்கிக் கணக்கு) எடுத்துப் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. சிவகங்கை மற்றும் சேலம் மாவட்டங்களில் நூற்றுக் கணக்கில் ஊராட்சிகள் இருப்பது குறிப்பிடத் தக்கது.
மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு கடிதங்களிலும், 27.05.2021 அன்று நடந்த சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தின் காணொளிக் காட்சி இணைய வழிக் கூட்டம் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. சேலம் சுற்றறிக்கையில் முடிந்தால் குங்குமம், தமிழ்முரசு போன்ற வார மற்றும் மாலை இதழ்களையும் வாங்க வழிவகை செய்யக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஊராட்சிகளில் முதல் வங்கிக் கணக்கு அல்லது பொது நிதி கணக்கு என்பது சம்பந்தப்பட்ட ஊராட்சி மக்களின் வீட்டு வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, சொத்து வரி உள்ளிட்ட சிறுகச் சிறுக சேமித்தத் தொகைகளின் தொகுப்பு ஆகும். இவ்வாறு, கிராம மக்களின் அடிப்படைத் தேவைகளையொட்டியச் செலவினங்களுக்கான இந்த நிதியைக் கொண்டு, கட்டாயமாக ஆளுங்கட்சியுடன் தொடர்புடைய பத்திரிகைகளை வாங்கச் சொல்லி ஊராட்சிகள் மீது அதிகாரிகளால் திணிக்கப்படும் இம்முயற்சி மிகவும் கண்டிக்கத்தக்கது.
அது மட்டுமல்லாமல், ஊராட்சி மன்றம் மற்றும் கிராமசபை ஆகியவற்றின் ஒப்புதலின்றி, மாவட்ட அளவிலேயே முடிவெடுக்கப்பட்டு அங்கிருந்து சுற்றறிக்கைகளை அனுப்பி, கட்டாயத்தின் பெயரில் குறிப்பிட்டப் பத்திரிகைகள் வாங்க செலவு செய்யச் சொல்வது ஜனநாயக மாண்புக்கு முற்றிலும் எதிரானது. மேலும், இது ஊராட்சிகளின் அதிகாரத்தில் தலையிடும் செயலும் ஆகும்.
எனவே, தமிழக அரசுக்குக்கு தன்னாட்சி சார்பில் கீழ்கண்ட கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.
1. உடனடியாக இந்த சுற்றறிக்கைகள் திரும்பப் பெறப்படுவதையும், ஊராட்சி மன்றம் மற்றும் கிராம சபை ஆகியவற்றின் ஒப்புதலின் அடிப்படையிலேயே AGAMT நூலகங்களில் நாளிதழ்கள் வாங்குவது குறித்து முடிவெடுக்கப் படுவதையும் தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்.
2. சேலம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களைத் தவிர்த்து வேறு மாவட்டங்களில் இது போன்ற பிரச்னை இருந்தால், தமிழ்நாடு அரசு தலையிட்டு உடனடியாக அதற்குத் தீர்வு காண வேண்டும்.
3. ஒன்றிய அரசு மாநிலங்களுக்கான அதிகாரங்களை வழங்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் தமிழ்நாடு அரசு, இந்த விவகாரத்தில் மட்டுமல்லாமல், பொதுவாக உள்ளாட்சிகளின் அதிகாரத்தில் தலையிடாமல் அவை சுதந்தரமாகச் செயல்பட வழிவகுக்க வேண்டும்.தன்னாட்சி க.சரவணன்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *