மருத்துவ கழிவுகளை முறையாக கையாள வேண்டும் : திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் பா. பா.பொன்னையா தகவல்
திருவள்ளூர் ஜூன் 11 : சுற்றுச்சூழல் வனம் மற்றும் சூழல் மாறுபாடு அமைச்சகம் மருத்துவ கழிவுகளை முறையாக சேகரித்து பிரித்து சுத்திகரித்து அகற்றுவதற்காக மருத்துவ கழிவுகள் மேலாண்மை விதிகள் 2016-ஐ அறிவிக்கை செய்துள்ளது. இவ் விதிகளை பின்பற்றுவதன் மூலம் மருத்துவ கழிவுகளின் உற்பத்தியையும் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தையும் குறைத்திட இயலும். இவ் விதிகளை அமல்படுத்த / செயல்படுத்துவதற்கான அதிகாரம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் உள்ளது.
இவ் விதிகளின் படி மருத்துவமனைகளிலிருந்து உருவாகும் மருத்துவ கழிவுகள் முறையாக பிரித்து சேமித்து பொது மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் சுத்திகரிப்பு செய்வதற்காக ஒப்படைக்க வேண்டும். மேலும் தொற்று ஏற்படுத்த கூடிய மருத்துவ கழிவுகளை 48 மணி நேரத்திற்கு மிகாமல் சேமித்தல் கூடாது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மருத்துவக் கழிவுகளை முறையாக கையாளுவதற்காக அனைத்து
மருத்துவமனைகள் உள்ளாட்சி அமைப்புகள் சுகாதாரத்துறை மற்றும் தொடர்புடைய துறைகளுக்கு ஏற்கனவே பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளது. இருப்பினும் செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மருத்துவ கழிவுகள் சாலைகள் ஆற்றங்கரைகள் நீர்நிலைகள் மற்றும் ஒதுங்கிய பகுதிகளில் சட்டவிரோதமாக கொட்டுவது தொடர்பாக பல்வேறு புகார்கள் தொடர்ந்து பெறப்படுகின்றன.
தற்போது நிலவிவரும் கோவிட் – 19 நோய் தொற்று சூழலில் மருத்துவக்கழிவுகளை முறையில்லாமல் திறந்த வெளியில் கொட்டுவது பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே அனைத்து மருத்துவமனைகள் கோவிட்-19 பராமரிப்பு மையங்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் மருத்துவ கழிவுகளை முறையாக பிரித்து சேமித்து அந்தந்த பகுதிகளில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால்
அனுமதிக்கப்பட்டுள்ள பொது மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும். மேலும் அங்கீகரிக்கப்படாத முறையில் மருத்துவ கழிவுகளை அகற்றுவதை தவிர்க்க உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு விதிகளை பின்பற்றாமல் மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு
வாரியம் எச்சரிக்கை செய்கிறது. இவ்வாறு திருவள்ளுர் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பொன்னையா தெரிவிக்கிறார்.