பாலக்கோடு அருகே மாங்காய் பாரம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து 9 பேர் காயம்
பாலக்கோடு.ஜுன்.10-
தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே நேற்று மாலை மாங்காய் பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததில் டிரைவர் உட்பட 9 பேர் படுகாயமடைந்தனர்.
கரூர் மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் சரவணன் (25) இவர் மகேந்திர மங்கலம் அருகே உள்ள கண்டக பைல் மலை கிராமத்தில் தனியார் ஜூஸ் கம்பெனிக்காக மாங்காய் தோட்டத்தில் உள்ள மாங்காய் பறித்து லாரியில் ஏற்றிக் கொண்டு மலையில் இருந்து மகேந்திரமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தார், அதே லாரியில் மாங்காய் பாரத்தின் மேல் ஜக்க சமுத்திரம் பகுதியை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர் மாங்காய் மேல் அமர்ந்தபடி வந்தனர், லாரி வஜ்ஜரபள்ளம் திருப்பத்தில் வந்த போது லாரியின் பிரேக் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி 5 அடி பள்ளத்தில் இறங்கியது. இந்த விபத்தில் டிரைவர் உட்பட லாரியில் வந்த ஜக்கசமுத்திரம் பகுதிய சேர்ந்த சின்னகன்னு (45), முருகம்மாள் (32) சின்ன பொன்னு(42), முருகன் (42, மாதன் ( 41), திருப்பதி (38) பண்ணீர் (47) மாதன் (45) உள்ளிட்ட 3 பெண்கள் 6 ஆண்கள் என மொத்தம் 9 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது, அப்பகுதி மக்கள் திரண்டு வந்து அனைவரையும் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், படுகாயமடைந்தவர்களை மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து மகேந்திர மங்கலம் காவல் உதவி ஆய்வாளர் குணசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.