ஆவடியில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் : மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பாஸ்கரன், மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா ஆகியோர் ஆய்வு :
திருவள்ளூர் ஏப் 29 : திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சியில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் நகராட்சிகளின் நிர்வாக ஆணையருமான கா.பாஸ்கரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
ஆவடி மாநகராட்சி, திருமுல்லைவாயலில் பல்வேறு வார்டுகளில்; நடைபெற்ற மருத்துவ முகாம்களில் பொதுமக்களிடமிருந்து சளிமாதிரி சேகரிப்பு பணிகளையும், கிருஷ்ணா கார்டன் பகுதியில் நோய் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி அமைக்கப்பட்டுள்ளதையும், பச்சையம்மன் கோயில் அருகில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு, பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் தயாரித்து விநியோகிக்கும் பணிகளையும், டி.ஆர்.பி.சி.சி.சி. இந்து கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் வருகை புரிய உள்ள 600-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் முகவர்களுக்கு சளிமாதிரிகள் சேகரிக்கும் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்தினார்.
பின்னர் ஆவடி மாநகராட்சி பேருந்து நிலையம் மற்றும் பணிமனையில் மாநகர போக்குவரத்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கோவிட் – 19 தடுப்பூசி திருவிழாவில் தடுப்பூசிகள் போடுவதை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் நகராட்சிகளின் நிர்வாக ஆணையருமான கா.பாஸ்கரன் மற்றும் மாவட்ட ஆட்சியருமான பா.பொன்னையா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வெ.முத்துசாமி, உதவி ஆட்சியர் (பயிற்சி) அனாமிகா ரமேஷ், ஆவடி மாநகராட்சி ஆணையர் பா.நாராயணன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் பிரபாகரன் (பூவிருந்தவல்லி) மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.