திருவள்ளூர் மாவட்ட 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் தொடர்பாக கலந்தாலோசனைக் கூட்டம்

Loading

திருவள்ளூர் ஏப் 25 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலின் மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பா.பொன்னையா தலைமை தாங்கி கூறியதாவது :

திருவள்ளூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை வருகின்ற 02.05.2021 அன்று காலை 8 மணியளவில் வாக்கு எண்ணும் மையங்களில் தொடங்கப்படுகிறது.கும்மிடிப்பூண்டி,பொன்னேரி (தனி),பூந்தமல்லி (தனி),ஆவடி தொகுதி ஸ்ரீராம் வித்யாமந்திர் மெட்ரிகுலேசன் உயர்நிலை பள்ளியிலும்,திருத்தணி, திருவள்ளூர் தொகுதி ஸ்ரீராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், மதுரவாயல், அம்பத்தூர்,மாதவரம்,திருவொற்றியூர் தொகுதி ஸ்ரீராம் பாலிடெக்னிக் கல்லூரியிலும் வாக்குகள் எண்ணப்படும்.

மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை வேட்பாளர்கள் முன்னிலையில் திறக்கப்படும். வாக்கு எண்ணிக்கை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் நடைபெறும்.ஒவ்வொரு வேட்பாளரும் தங்களால் நியமிக்கப்பட்ட முகவர்களுடன் காலை 7 மணிக்கு முன்பாக ஆஜராக வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு படிவம் 18-ல் மேஜைகளுக்கான முகவர் நியமனம் தொடர்பான இரண்டு பிரதிகளில் புகைப்படத்துடன் உடனடியாக அளிக்க தெரிவிக்கப்பட்டது.

முகவர்களுக்கு 27.04.2021 மற்றும் 28.04.2021 ஆகிய இரு நாட்களில் கோவிட் -19 தொடர்பான பரிசோதனை மற்றும் தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்படும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் பொழுது முக கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.வாக்கு எண்ணிக்கை முகவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்பட்ட அடையாள அட்டையினை கண்டிப்பாக கொண்டு வரவேண்டும். முகவர்கள் தொலைபேசி, கேமரா போன்றவற்றை எடுத்து வர அனுமதியில்லை.

வாக்குபதிவு இயந்திரத்தில் எண்ணிக்கை முடிவுகள் ஒவ்வொரு சுற்றுக்கு பிறகும் முகவர்களுக்கு அளித்து ஒப்புதல் பெறப்படும்.எண்ணிக்கை முடிவுகள் பெறுவதில் சிரமம் ஏற்பட்டால் அந்த இயந்திரத்தினை தேர்தல் நடத்தும் அலுவலரின் மேசைக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 5 இயந்திரங்கள் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்டு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் எண்ணிக்கை முடிவுற்ற பிறகு ஒவ்வொன்றாக இயந்திரங்களில் உள்ள சீட்டினை எண்ணிக்கை செய்யப்படும். அஞ்சல் வாக்குகள் 500 வாக்குகளுக்கு ஒரு மேசை அமைக்கப்படும். அதற்குண்டான முகவர் நியமனம் செய்ய தெரிவிக்கப்பட்டது என்று மாவட்ட தேர்தல் அலுவலர் பா.பொன்னய்யா கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.அரவிந்தன்,கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட வருவாய் அலுவலருமான வெ.முத்துசாமி, உதவி ஆட்சியர் (பயிற்சி) அனமிகா ரமேஷ்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) முரளி, 10 சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *