பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது.
ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. ஏழாம் நாளான நேற்று பழனிமலை அடிவாரத்தில் அருள்மிகு முத்துக்குமாரசாமி-வள்ளி,தெய்வானை சமேதராக தேரில் எழுந்தருளி நான்கு கிரி வீதிகளிலும் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டம் நிகழ்ச்சியில் பழனி கோவில் இணை ஆணையர் குமரதுரை, அறங்காவலர் குழு தலைவர் அப்புக்குட்டி மற்றும் அறங்காவலர்குழுவினர் உட்பட ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.