திருவள்ளூரில் கண்ணியத்துடன் வாக்களிக்க அழைப்பிதழ் மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி : மாவட்ட தேர்தல் அலுவலர் துவக்கி வைத்தார் :
![]()
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு 100 சதவிகிதம் வாக்குப்பதிவு பதிவினை வலியுறுத்தும் விதமாக பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
திருவள்ளுர், பெரியகுப்பம், வள்ளலார் தெருவில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக வாக்களிக்கும் வைபோகம் – கண்ணியத்துடன் வாக்களிக்க அழைப்பிதழ்கள் மற்றும் தாம்புலத் தட்டுக்களை வீடு, வீடாகச் சென்று பொதுமக்களுக்கு வழங்கி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் 300-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் ஆகியோர் இணைந்து திருவள்ளுர் நகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அழைப்பிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அழைப்பிதழ்களில் 18 வயது நிரம்பியவர்கள் தங்களது பெயர் வாக்களர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதை உறுதி செய்வதுடன் தங்கள் குடும்பத்தினர், சுற்றத்தார், நண்பர்கள் என அனைவரது பெயரும் வாக்காளர் பட்டியலில் பெயர் உறுதி செய்தும், தங்கள் அருகில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்குப்பதிவு இட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வலியுறுத்தும் விதமாக, விழிப்புணர்வு ஏற்படுத்த 60-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்ட தங்களது இணைப்புச் சக்கரம் பெருத்தப்பட்ட இரண்டு சக்கர வாகனத்தில் வாகன பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணி திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடங்கி, திருவள்ளுர் சி.வி.நாயுடு சாலை வழியாக ஜே.என்.சாலையில் உள்ள பேருந்து நிலைய அருகில் நிறைவடைந்தது. இதில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகள் அனைத்து தரப்பினரும், மாற்றுத்திறனாளிகளும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பிச் சென்றனர்..
இதில் திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் இராஜராஜேஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஸ்ரீநாத் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
