விபத்துகளைத் தவிர்க்க எளிய சில வழிமுறைகள்…பேருந்து நிற்பதற்குள் எழ முற்படாதீர்கள்…

Loading

விபத்துகளைத் தவிர்க்க எளிய சில வழிமுறைகள்
————————————-
பேருந்து நிற்பதற்குள் எழ முற்படாதீர்கள்…
————————————-
நீங்கள் பயணிக்கும் பேருந்து, உங்கள் பயணம் முற்றுப் பெற வேண்டிய ஊரிலுள்ள ‘பேருந்து நிலைய’ வளாகத்தைச் சென்றடைந்தவுடன் நீங்கள் முதல் ஆளாக வண்டியை விட்டு இறங்க வேண்டும் எனும் அவசர நிலைக்கு தள்ளப் படுகி்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படியென்றால் அடுத்து நீங்கள் செய்யும் உடனடிக் காரியம் உங்களது இருக்கையிலிருந்து சட்டென எழுந்து வாயிற்படி அருகே சென்று நிற்க வேண்டும்…
அப்படித்தானே?

ஆனால் அங்கே தான் உங்களை அறியாமலேயே காத்திருக்கிறது ஆபத்து.

உங்களது இருக்கையிலிருந்து நீங்கள் வேகமாக எழும்போது பேருந்தின் சக்கரங்கள் தடாலென வேகத்தடைமீது ஏறி இறங்கலாம். அப்போது நிலை தடுமாறி உங்கள் தலை மடீரென்று மேற்கூரைமீதோ அல்லது மேற்கூரையில் இணைக்கப்பட்டிருக்கும் கைப்பிடிக்குழாய் மீதோ அல்லது லக்கேஜ் கேரியரைத் தாங்கி நிற்கும் இரும்புப் பட்டை மீதோ மோதிப் படுமோசமான கதிக்கு ஆளாகலாம்; அல்லது முன்னிருக்கையில் மோதிக் கொள்ளலாம். அல்லது இரண்டுமே சேர்ந்து நேரிடலாம்.

உங்களுக்கு நீங்களே ஏற்படுத்திக் கொள்ளும் இந்த விபத்தின் தன்மையானது அப்போதைய நிலையில் பேருந்தின் வேகத்தைப் பொருத்து மாறுபடலாம்.

சரி … அதே இருக்கையில் உங்களுக்கு அருகே உங்களது மனைவியும் அமர்ந்திருந்து – அதுவும் கையில் குழந்தையோடு அமர்ந்திருந்து – உங்களைப் போலவே அவரும் சட்டென்று எழு முற்பட்டார் என்று என்று வைத்துக் கொள்வோம் … அவரது நிலைமையை சற்று யோசித்துப் பாருங்கள்… நினைத்தாலே பகீர் என்று நெஞ்சில் நெருப்பைக் கொட்டினார்போ லிருக்கிறதல்லவா…?

இது, பயணிகளை எச்சரிப்பதற்காகக் கூறப்படும் வெறும் கற்பனையான பயமுறுத்தல் அல்ல… பல நேரங்களில்,பல பேருந்துகளில், இதுபோன்று விபத்துக்குள்ளாகிப் பலர் பற்களை இழந்திருக்கிறார்கள்… தலையில் காயம் உண்டாகிப் பல உபாதைகளுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்… குழந்தையையும் அதே போன்ற நிலைக்கு ஆளாக்கி சொல்லொணாத் துயரத்திற்குள்ளாகி யிருக்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நேரிட்டாலும் அதற்குப் போக்குவரத்து நிர்வாகம் பொறுப்பேற்காது என்பதால் பல விஷயங்கள் வெளியே தெரிவதில்லை. ஆனால் நாமாகத் தேடிக்கொள்ளும் இதுபோன்ற துயரங்கள் எளிதில் தவிர்க்கப்படக் கூடிய ஒன்றுதான்.

சிந்தித்துப் பாருங்கள்… உங்களுக்கு என்னதான் அவசர வேலை இருந்தாலும் அடுத்த சில வினாடிகள் பொறுமை காத்தால் பேருந்து நிற்கப் போவது சர்வ நிச்சயம். அவ்வாறு நின்றபிறகு மிக அவசரமாயின், மற்றவர்களை முந்திக்கொண்டு நீங்கள் கீழே இறங்கலாம். அதைவிடுத்து அநியாயத்திற்கு ரிஸ்க் எடுத்து ஆபத்துக்கு ஆளாகக் கூடாது.

– *ஸ்வெட்லானா*
_____________________

*- ஜி.கே.ஸ்டாலின்*
மூத்த பத்திரிகையாளர் /
சமூக ஆர்வலர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *