சேலம் மாவட்டத்தில் உள்ள 11சட்டமன்ற தொகுதிகளுக்கு 4 வாக்கு எண்ணும் மையங்கள்: மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுவதையொட்டி, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவாகும் வாக்குகள் எண்ணுவதற்கு அமைக்கப்பட்டுவரும்,வாக்கு எண்ணும் மையங்களை,மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான இராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி செவ்வாய்க்கிழமையும், வாக்கு எண்ணிக்கை மே மாதம் இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்றும் நடைபெற உள்ளது.சேலம் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளான கெங்கவல்லி (தனி ), ஆத்தூர் (தனி), ஏற்காடு( தனி), ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி, சேலம் மேற்கு ,சேலம் வடக்கு, சேலம் தெற்கு ,வீரபாண்டி ஆகிய பதினோரு தொகுதிகளுக்கும் நான்கு இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி,சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில்,ஓமலூர், மேட்டூர், சேலம் மேற்கு, சேலம் வடக்கு ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையமும்,சேலம் அம்மாப்பேட்டை ஸ்ரீ கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ஏற்காடு,சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்கு எண்ணும் மையமும்,சேலம் தலைவாசல் வட்டம் ,மணிவிழுந்தான் ஸ்ரீ மாருதி கல்வி நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாருதி பாலிடெக்னிக் கல்லூரியில் கெங்கவல்லி மற்றும் ஆத்தூர் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்கு எண்ணும் மையமும்,சேலம் சங்ககிரி வட்டம்,வீராச்சிபாளையம் கிராமத்தில் உள்ள விவேகானந்தா கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள, சுவாமி விவேகானந்தா இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கல்லூரி மற்றும் விவேகானந்தா மருந்தியல் மகளிர் கல்லூரியில் ,எடப்பாடி ,சங்ககிரி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, வாக்கு எண்ணும் மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து ,தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி ,வாக்கு எண்ணும் மையங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் முழுமையாக நிறைவேற்ற வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின்போது, சேலம் மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ்குமார் ,சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபாகணிகர் உட்பட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அதிகாரிகள் உடனிருந்தனர்.