திருவள்ளூரில் அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் : பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை :
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 4-வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் இரவு பகலாக தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று போராத்தில் ஈடுபடும் ஊழியர்களை தங்கள் உடல் உபாதைகளை கழிக்க ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த போராட்டத்தில் ஈடுபட்ட 500 க்கும் மேற்பட்ட பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ஆனால் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர்களை தடுத்து நிறுத்த முயற்சித்தும் முடியாததால் பெண் ஊழியர்கள் அலுவலகத்திற்குள் நுழைய முயற்சித்தனர். இதனால் ஆட்சியர் அலுவலக கதவு மூடப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் டிஎஸ்பி துரைபாண்டியன் மற்றும்ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். உடனடியாக மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஊழியர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் நேரில் அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பெண் ஊழியர்களை ஆட்சியர் அலுவலகத்திற்கு தங்கள் உடல் உபாதைகள் கழிக்க அனுமதிக்க அவர் உத்தரவிட்டதை அடுத்து அவர்கள் மீண்டும் போராட்ட களத்திற்கு வந்தனர்.
மாநில நிர்வாகிகளை தமிழக அரசு உடனடியாக அழைத்துப் பேசி மூன்று அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் அடுத்த கட்டமாக மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் எச்சரித்தனர் .