திருச்சி மாவட்டம் சூரியூரில் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி மக்கள் முறையீடு …
திருச்சி: திருச்சி மாவட்டம் சூரியூரில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கிராம மக்கள் மனு கொடுத்தனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவரது தலைமையில் 50க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆட்சியர் சிவராசுவை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில், சூரியூர் அந்தோணியார் கோவில் தெருவை 21 பேர் ஆக்கிரமித்துள்ளனர். வீடு, சுற்றுச்சுவர் உள்ளிட்ட வடிவங்களில் உள்ள இந்த ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனாலும் அதிகாரிகள் அவ்வப்போது சிறு சிறு அளவிலான ஆக்கிரமிப்புகளை மற்றும் அகற்றி விட்டு சென்று விடுகின்றனர். அதனால் மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைத்து விடுகிறது. ஆகையால் முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்த சாலையை அகலப்படுத்தி புதிதாக அமைத்து கொடுக்க வேண்டும். மக்களின் எதிர்ப்பையும் மீறி ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சாலையை அமைத்து, சாக்கடையையும் ஊராட்சி நிர்வாகம் அமைத்து விட்டது. இதனால் சாலை மிக குறுகலாக உள்ளது. வாகனங்கள் செல்ல சிரமமாக இருக்கிறது. ஆகையால் ஆக்கிரமிப்புகளை சரியான அளவில் அகற்றி அரசாங்க இடத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
அப்போது சூரியூர் அந்தோணியார் கோவில் தெருவைச் சேர்ந்த தாஸ், வேளாங்கண்ணி, அருள்தாஸ், ஜெகநாதன், ஆரோக்கியசாமி, மரியம் சந்தோஷ் மற்றும் ஏராளமானோர் உடன் இருந்தனர்.