சேலம் தம்மம்பட்டியில் வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ள பட்டுள்ள வசதிகளை குறித்து நேரில் ஆய்வு செய்தார் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ராமன்:மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் எளிதில் சென்று வாக்களிக்க கூடுதல் ஏற்பாடுகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்:
சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், தம்மம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் அடிப்படை வசதிகளும், இன்னபிற வசதிகளும் முழுமையாக உள்ளதா என மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் இந்த வருடம் நடைபெற உள்ளதை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே உள்ள வாக்குச் சாவடிகள் மற்றும் புதியதாக அமைக்கப்பட்டு வரும் கூடுதல் வாக்குச்சாவடிகள் ஆகியனவற்றில் அடிப்படை வசதிகள் குறித்தும் வாக்குச்சாவடி மையங்கள் அமைவிடம் குறித்தும், நேரில் பார்வையிட்டு வாக்குப் பதிவு மையங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளனவா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தம்மம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில், வாக்களித்த வரும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் முழுமையாக உள்ளனவா எனவும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதான முதியோர்கள் எளிதாக சென்று வாக்களிக்கும் வகையில் சாய்வு தளம் அமைக்கப்பட்டு உள்ளதா எனவும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சித் தலைவருமான ராமன் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, கெங்கவல்லி வருவாய் வட்டாட்சியர் வரதராஜன் உட்பட வருவாய்த்துறை மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் உடனிருந்தனர்.