நொளம்பூரில் கொலை செய்து பிரேதத்தை எரித்து மறைக்க முயன்ற 2 குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினரையும், கட்டுப்பாட்டறைக்கு அழைப்பு விடுத்த நபரையும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
குமரேசன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வ/30 என்பவர் நேற்று (04.02.2021) நள்ளிரவு சுமார் 11.00 மணியளவில் நொளம்பூர் பகுதியில் டீ வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, நொளம்பூர், வாவின் ரோடு, மங்கள் ஏரி பூங்கா அருகில் உள்ள நடைபாதையில் 2 நபர்கள் ஒரு மனித உடலை எரித்துக் கொண்டிருப்பதை கண்டு, காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், கட்டுப்பாட்டறையிலிருந்து கிடைத்த தகவலின்பேரில், நேற்று (04.02.2021) இரவு ரோந்து பணியிலிருந்த, V-7 நொளம்பூர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி.ரீனா, தலைமைக் காவலர் பாலசுப்பிரமணி (த.கா.26164), நுண்ணறிவுப்பிரிவு தலைமைக் காவலர் பிச்சைக்கண்ணு (த.கா.35596) மற்றும் K-10 கோயம்பேடு காவல் நிலைய தலைமைக் காவலர் சனா (த.கா.32536) ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றபோது, அங்கிருந்த 2 நபர்கள் ஓடினர். உடனே காவல் குழுவினர் அந்த 2 நபர்களை துரத்திச் சென்று பிடித்து, அங்கு ஆய்வு செய்தபோது, ஒரு இறந்த ஆண் நபர் பாதி எரிந்த நிலையில் எரிந்து கொண்டிருந்ததைக் கண்டு, தீயை அணைத்து, விசாரணை செய்தனர்.
விசாரணையில் பிடிபட்ட நபர்கள் விஷ்ணு, வ/33, த/பெ.ரன் பகதூர், நேபாளம் மற்றும் பாஸ்கர், வ/44, த/பெ.உதயகுமார் குப்பை பொறுக்கும் வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு அறிமுகமான இறந்த நபர் சிவகுமார் (எ) எலி, வ/27, சங்கராபுரம், கள்ளகுறிச்சி மாவட்டம் பழைய பொருட்களை பொறுக்கி விற்பவர் என்பதும், நேற்று (04.02.2021) இரவு மது அருந்திவிட்டு பேசிக் கொண்டிருந்தபோது, வாக்குவாதம் ஏற்பட்டதால், விஷ்ணு மற்றும் பாஸ்கர் ஆகியோர் சேர்ந்து சிவகுமார் (எ) எலியை கல்லால் தாக்கியதாகவும், அதில் சிவகுமார் இறந்துவிட்டதால் பிரேதத்தை எரித்ததாகவும் தெரிவித்தனர். அதன்பேரில், குற்றவாளிகள் விஷ்ணு மற்றும் பாஸ்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தக்க சமயத்தில் விரைந்து சென்று கொலை குற்றவாளிகளை கைது செய்த V-7 நொளம்பூர் காவல் ஆய்வாளர் திருமதி.ரீனா, தலைமைக் காவலர்கள் பிச்சைக்கண்ணு, சனா மற்றும் குற்ற சம்பவத்தை கண்டவுடன் காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்த டீ வியாபாரம் செய்யும் குமரேசன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகியோரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால்,அவர்கள் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
******