புலியூர் கிராமத்தில் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு எளிய முறையில் திருமணம் : ஒரு லட்சம் மதிப்பிலான சீர்வரிசையை தொழிலதிபர் வழங்கினார் :
திருவள்ளூர் அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த திவ்யா என்ற கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளிப் பெண்ணுக்கும் சேலத்தை சேர்ந்த கண்பார்வையற்ற ஆச்சி மசாலா நிறுவனத்தில் பணிபுரியும் மாரியப்பன் என்பவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர்களால் நிச்சயம் செய்யப்பட்டது.
மணப் பெண்ணுக்கு தந்தை இல்லாத நிலையில் நீண்ட நாட்களாக சீர்வரிசை கொடுத்து திருமணம் செய்ய முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் தொழிலதிபர் எஸ்.பாபு என்பவர் மண மக்களுக்கு சீர்வரிசையாக கட்டில் பீரோ, சில்வர் பாத்திரங்கள், பித்தளை பாத்திரங்கள் என ஒரு லட்சம் மதிப்பில் வழங்கினார்.
இதனையடுத்து புலியூர் கிராமத்தில் உள்ள கோயிலில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. இதில் தொழிலதிபர் பாபு மற்றும் அவரது மனைவி பங்கஜம் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
மணமகன் ஆச்சி மசாலா என்ற நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில், கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளி மணப் பெண் எம்.ஏ., எம்.பில். பி.எட் படிப்பு படித்திருப்பதால் அரசு சார்பில் தனக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.மேலும் திருமணத்திற்கு சீர்வரிசை வழங்கிய தொழிலதிபர் பாபு அவர்களுக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.