முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் என்ற சிறப்பான திட்டத்தை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர் :
மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா ஏழை எளிய மக்கள் தரமான சுகாதார சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினார்கள்.
அதன்படி கடந்த 2020-ம் ஆண்டில் 11 அரசு மருத்துவ கல்லூரிகள் புதியதாக உருவாக்கப்பட்டு சுமார் 1650 மருத்துவர்கள் புதியதாக மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்க, புரட்சித் தலைவி அம்மா நல்லாசியுடன் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அரசு மருத்துவ கல்லூரிகள் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்ததை தொடர்ந்து, பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் தனியார் மருத்துவமனைகளில் இருக்கும் வசதிகளை விட கூடுதலாக அரசு மருத்துவமனைகளில் உயர் தொழிற்நுட்ப கருவிகளை கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அரசு பள்ளியில் படித்த ஏழை எளிய மாணவர்கள் மருத்துவ படிப்பு படிக்க உள் ஒதுக்கீடாக 7.5 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்கி ஏழை எளிய மாணவ, மாணவியரும் மருத்துவம் படிக்கும் சூழ்நிலையை தமிழ்நாடு முதலமைச்சர் உருவாக்கியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பாக செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து கடந்த 14.12.2020 அன்று தமிழ்நாடு முழுவதும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளருடன் 2000-ம் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகள் தலைமை செயலகத்தில் துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, திருவள்ளுர் மாவட்டத்தில் ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிக்கின்ற பகுதிகளை தேர்ந்தெடுத்து அங்கேயே அவர்கள் தங்கள் உடலில் ஏற்படுகின்ற நோய்களுக்கு சிகிச்சை பெற கூடிய சூழ்நிலையை உருவாக்கும் வகையில், 53 எண்ணிக்கையில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகள் துவக்க ஆணை வழங்கப்பட்டுள்ளது. திருவள்ளுர் மாவட்டத்தில் 21.12.2020, 26.12.2020 மற்றும் 30.12.2020 ஆகிய நாட்களில் ஊரக தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின்,மாவட்ட ஆட்சியர் பா.பொன்னய்யா மற்றும் சட்டமன்ற உறப்பினர்கள் ஆகியோர் முதற் கட்டமாக முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகளை திறந்து வைத்து, பார்வையிட்டு, கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்கள்.
முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளருடன் செயல்படும். சளி, காய்ச்சல், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள் உடனடியாக வழங்கப்படும். இந்த அம்மா மினி கிளினிக்குகள் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் காலை 8 மணிமுதல் 12 மணிவரையிலும், மாலை 4 மணிமுதல் 8 மணி வரையிலும், ஊரகப்பகுதிகளில் காலை 8 மணிமுதல் 12 மணிவரையிலும், மாலை 4 மணிமுதல் 7 மணி வரையிலும் செயல்படும். இந்த அம்மா மினி கிளினிக் வாரத்தில் 6 நாட்களும்; செயல்படும். சனிக்கிழமை அன்று விடுமுறை நாளாகும்.
அம்மா மினி கிளினிக்கில் சிகிச்சையாக சளி, காய்ச்சல், தலைவலி, இரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதனை, ஹீமோகுளோபின், சிறுநீர் பரிசோதனை உட்பட பல்வேறு அடிப்படை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். மேலும், உடலில் ஆக்சிஜன் அளவை கணக்கிடுவதற்காக ஆக்ஸி மீட்டர் கருவி, உடல் வெப்பநிலையை கண்டறியும் தெர்மா மீட்டர் உட்பட அடிப்படை மருத்துவ உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு உயர் சிகிச்சை தேவைப்படும்போது 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யப்படுவார்கள்.மாவட்டத்தில் 53, அம்மா மினி கிளினிக்குகளில் முதற்கட்டமாக திருவள்ளுர் மற்றும் பூவிருந்தவல்லி சுகாதார மாவட்டங்களில் 18 எண்ணிக்கையில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகள் துவங்கப்பட அனுமதிக்கப்பட்டு தற்பொழுது 17 எண்ணிக்கையில் திறந்து வைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது.
அம்மா மினி கிளினிக் வாயிலாக பயனடைந்த திருவள்ளுர் மாவட்டம், பூண்டி ஊராட்சி ஒன்றியம், திம்மபூபாலபுரம் ஊராட்சி, ஓட்டேரி கிராமத்தைச் சேர்ந்த நதியா கூறுகையில் நான் மாதாந்திர பரிசோதனைக்காக சுமார் 15 கி.மீ. தூரம் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று வந்தேன். ஆனால் தற்பொழுது தமிழ்நாடு முதலமைச்சர் கிராமத்திற்கு அருகிலேயே அம்மா மினி கிளினிக் திறக்க உத்தரவிட்டுள்ளார்கள். இது என்னைப் போன்று கர்ப்பிணி பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. எனவே முதலமைச்சர் அவர்களுக்கு என் சார்பாகவும், என் குடும்பத்தினர் சார்பாகவும், என் கிராம மக்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
திம்மபூபாலபுரம் ஊராட்சியைச் சேர்ந்த சம்பூரணம் கூறுகையில் எனக்கு இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரைக்கான அறிகுறிகள் இருந்த நிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைக்கு சென்று மருந்து மாத்திரைகளை வாங்கி வந்தேன். அவ்வாறு செல்லும்போது நீண்ட தூரம் காரணமாக பயணம் மேற்கொள்வதால் உடல் சோர்வு, அலைச்சல் ஆகியவை ஏற்படும் நிலை இருந்தது. ஆனால் தற்பொழுது எங்கள் கிராமம் அருகிலேயே அம்மா மினி கிளினிக் துவங்கப்பட்டுள்ளதால் எளிதில் மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ள மிகுந்த பயனள்ளதாக உள்ளது. முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கினை வழங்கிய முதலமைச்சருக்கு என்னை போன்ற முதியோர்கள், வயதானவர்கள உள்ளிட்டோர் உள்ளங்கனிந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
அம்மா மினி கிளினிக் வாயிலாக பயனடைந்த நாகம்மா தெரிவித்ததாவது. எனக்கு நீரிழிவு நோய் உள்ளது. அரசு மருத்துவமனைக்குச் சென்று மாத்திரைகள் பெற்று வந்தேன். அது எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது. தற்பொழுது எங்களது கிராமத்திலேயே அம்மா மினி கிளினிக் துவங்கப்பட்டுள்ளதால் என்னை போன்றவர்கள் மற்றும் ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் எங்களது கிராமத்திற்கு அம்மா மினி கிளினிக் வழங்கிய தமிழக முதலமைச்சருக்கு அனைத்து மக்களின் சார்பாக உள்ளங்கனிந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்வார்கள். எவ்வளவு தான் செல்வம் இருந்தாலும் நோய் வந்து விட்டால் செல்வத்தை அனுபவிக்க முடியாது. அப்படிப்பட்ட நோயற்ற வாழ்வை தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உருவாக்கி தருவதே தமிழ்நாடு முதலமைச்சரின் உயரிய எண்ணமாக உள்ளது.
தொகுப்பு :
க.அ.முகம்மது ரசூல் – செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்
பி.அஸ்வின்குமார் – உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி),
திருவள்ளுர் மாவட்டம்.