திருவண்ணாமலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக தொழிற்சங்கத்தினர் வாகன பேரணி- ஆர்ப்பாட்டம் டிராக்டர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு…
டெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்தும், மத்திய அரசின் விவசாய விரோத வேளாண்மை சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், தனியார்மயம் மற்றும் கார்ப்பரேட் கொள்கைகளை கைவிட வலியுறுத்தியும் திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் முதல் காமராஜர் சிலை வரை வாகனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையொட்டி நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர் .நேற்று மாலை 4 மணி அளவில் இந்த போராட்டம் தொடங்கியது .இதில் பல்வேறு தொழிற் சங்கத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர் .
பின்னர் பேரணி காமராஜர் சிலையை சென்றடைந்ததும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள டிராக்டர்களில் வந்த விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.இருந்தபோதிலும் காமராஜர் சிலை அருகில் தடுத்து நிறுத்தப்பட்ட டிராக்டர்கள் மீது ஏறி நின்று போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர் .
இந்த போராட்டம் மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்த போராட்டத்தில் இயற்கை விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் டாக்டர் எஸ் .ஆர் .ஜாகீர்ஷா மற்றும் எல். டி .எப் .,சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த போராட்டம் காரணமாக திருவண்ணாமலையில் பரபரப்பு ஏற்பட்டது.