பாலமேட்டில் உற்சாகமாக ஜல்லிக்கட்டு சீறிபாய்ந்த 783 காளைகள், அடக்கிய மாடுபிடி வீரர்கள்…
மதுரை
மதுரை பாலமேட்டில் நேற்று காலை 8 மணிக்கு ஜல்லிகட்டு விழா தொடங்கி நடைபெற்றது. இதில் மொத்தம் 783 காளைகள் பங்கேற்றனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் விழா நேற்று உலகத் தமிழர்களால் கொண்டாடப்பட்டது. பொங்கல் விழாவின் 2ம் நாளான மாட்டு பொங்கல் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடந்தது.பொங்கல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு 8 மணிக்கு தொடங்கியது. இதில் மொத்தம் 783 காளைகள் பங்கேற்றுள்ளன. உடற் தகுதி, கொரோனா சான்றுக்கு பின் 649 பேர் மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர். பகல் 2 மணி வரை 420 காளைகள் களம் இறங்கின. சிறந்த காளை, வீரருக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது.இது தவிர பிடிபடாத காளைகளுக்கும், அடக்கிய வீரர்களுக்கும் தங்க காசு, கட்டில், பீரோ, மெத்தை, சைக்கிள், இருசக்கர வாகனங்கள், அண்டா, மிக்ஸி, குக்கர் என ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.
கலெக்டர் அன்பழகன், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கலெக்டர் அன்பழகன், வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சோழவந்தான் எம்.எல்.ஏ., மாணிக்கம் ஆகியோர் தலைமையில் வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை முன்னிட்டு மதுரை மாவட்ட எஸ்.பி., சுஜித்குமார் தலைமையில் 750க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காளைகளை நிறுத்தும் இடத்தில் உரிமையாளர்களிடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தினர். கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டை காண ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ளனர்.