தாமிரபரணியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்: நெல்லையில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
தாமிரபரணி நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் நெல்லை மாநகர் பகுதியில் தாமிரபரணி கரையோரம் உள்ள 150 வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது.
திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த 4 நாள்களாக தொடர் மழை கொட்டி தீர்த்து வருகிறது. மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகியவை நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை அணைகளிலிருந்து 22,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் காட்டாற்று வெள்ளம் சேர்ந்து திருநெல்வேலி மாநகரப் பகுதி தாமிரபரணி ஆற்றில் சுமார் 25 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் பாய்ந்தோடியது.
இதனால் கருப்பந்துறை, மீனாட்சிபுரம், கைலாசபுரம், வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் குடியிருப்புக்குள் வெள்ளம் புகுந்தது. வண்ணாரப்பேட்டை எட்டுத்தொகை தெரு, திருக்குறிப்பு தொண்டர் தெரு, இசக்கியம்மன் கோயில் தெரு ஆகிய இடங்களில் 150க்கும் மேற்பட்ட வீடுகளை புதன்கிழமை காலையில் வெள்ளம் சூழ்ந்தது. தீயணைப்பு வீரர்களும், வருவாய்த் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து பொது மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர். குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் மக்களை படகுகள் மூலம் மீட்டனர். மேலும் தொடர் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் செய்வதறியாது திகைத்து வருகிறார்கள்.